Latest News

September 02, 2015

யுத்தத்தை வெற்றிகொண்டவர் மஹிந்த ராஜபக்ச ; ஜனாதிபதி மைத்திரிபால பாராட்டு
by admin - 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை நாட்டில் அமைப்பதற்கான முதற்கட்ட  நடவடிக்கையாக கட்சியை முழுமையாக மறுசீரமைக்கு உட்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியின் கீழும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழும் 30 வருடகாலமாக நீடித்த யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது நிறைவாண்டு விழா பொலனறுவை – கதுறுவெலவில் இன்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

எனது பயணம் மிகவும் வேகமற்றது. அமைதியான, பின்திரும்பாத வேகமற்ற பயணமே நான் பயணிக்கின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை அமைப்பதற்கு மனசாட்சிக்கு ஏற்ப தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அதனால் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியாக கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.

1956ஆம் ஆண்டு முதல் இதுவரைக் காலமும் கட்சிகளுக்கு இடையில் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையிலான போட்டித் தன்மையும், வைராக்கியமும் காணப்பட்டது.

எனினும் தற்போது நாட்டின் தேவைக்கு ஏற்ப அனைத்தையும் மாற்றியமைக்கும் அவசியம் காணப்படுகிறது.

வைராக்கிய அரசியலை விட்டு கட்சியை மறுசீரமைப்புக்கு உட்படுத்தி புதியதொரு பாதையில் பயணிக்க வேண்டியை அடையாளப்படுத்தி, செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்பவற்றை அறிந்துகொண்டு, புரிந்துகொண்டு முன்செல்ல வேண்டும்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அனைவருக்கும் தெளிவு அவசியம் – என்றார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், யுத்த வெற்றியையும் நினைவுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறக்கவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியில் மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் 30 வருடகாலமாக நீடித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்ததாக ஜனாதிபதி இதன்போது கூறினார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதிக்கு அருகில் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன, கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் விஸ்வா வர்ணகுலசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, அநுரபிரியதர்ஷன யாப்பா, ஏ.எச்.எம். பௌசி, மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபாலடி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வெளிநாடு சென்றிருப்பதால் நிறைவாண்டு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
« PREV
NEXT »

No comments