Latest News

September 19, 2015

மகிந்த இல்லாத அரசு ஒன்று தான் நாட்டுக்குத் தேவை - மைத்திரி
by Unknown - 0

மகிந்த ராஜபக்ச இல்லாத அரசு ஒன்று தான் நாட்டுக்குத் தேவையாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமையால் தற்பொழுது நாடு ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. ஜெனிவா மனித உரி மைகள் ஆணையகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 1,000 மடங்கு கடினத்தன்மை குறைக்கப்பட்டுள்ளது என வும் அவர் குறிப்பிட்டார். 

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்றுப் பிற்பகல் சந்தித்துப் பேசினர். இதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில்  ஜனாதிபதி கருத்து தெரிவித்தார். 

இதன்போது அவர்  தெரிவிக்கையில்,
ஜனவரி 8ஆம் திகதி நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் எமது வெளிநாட்டுக் கொள்கைகளில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டது. சர்வதேசத்துக்கு எமது நாடு தொடர்பில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

இலங்கையில்  இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்குத் தேசிய பொறிமுறை ஒன்றினூடாக தீர்வு பெற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டிலேயே அரசு இருக்கின்றது. ஒருவேளை நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படாமல், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது பல மடங்கு கடினமானதாக இருந்திருக்கும். அது மிகவும் பயங்கரமானதாக இருந்திருக்கும். நாடு பல்வேறு விளைவுகளைச் சந்திக்க நேரிட்டிருக்கும். மகிந்த ராஜபக்சவின் அரசு தான் சர்வதேசத்துகுச் சென்று பொய் வாக்குறுதிகளை வழங்கியது. உள்ளக விசாரணை நடத்துவதாகக் கூறியது. இறுதியில் சர்வதேசத்தைப் பகைத்துக் கொண்டது. 

தற்பொழுது நாடு ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை 1000 மடங்கு கடினத்தன்மை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேசம் தற்பொழுது இலங்கை தொடர்பில் தெளிவான நிலையில் உள்ளது. எங்களுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நாம் சிறந்த வெளிநாட்டுக கொள்கையை முன்னெடுத்து வருகின்றோம். ஆகவே இதே நிலமை தொடர வேண்டுமானால் நாட்டின் தற்போதைய தேவை மகிந்த இல்லாத அரசே என்றார். 
« PREV
NEXT »

No comments