Latest News

September 04, 2015

யாழ் பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜேவர்தன கொலை வழக்கு: பொலிசாரின் ஒழுங்கீனமான புலனாய்வு விசாரணை என சுட்டிக்காட்டி எதிரி விடுதலை. நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு
by Unknown - 0

யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருந்த கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து எழுந்த கலவர சூழலில் அங்கு சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜேவர்தன கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவிலேயே எதிரியை விடுதலை செய்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். 

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக முறையான சாட்சியம் அளிக்கப்படாமை, பொலிஸ் சாட்சியங்களில் காணப்பட்ட முரண்பாடான தன்மை என்பவற்றைச் சுட்டிகாட்டிய நீதிபதி எதிரியான பாலசிங்கம் பிரவீன் சுகராஜ் அல்லது பவநீதரன் என்பவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளார். 

இணுவில் பிரதேசத்தில் சலூன்காரரான இளைஞன் ஒருவரை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதையடுத்து, அங்கு கலவர சூழல் ஏற்பட்டிருந்தது. முன்னூறு தொடக்கம் நானூறு பேர் வரையிலான நபர்கள் வீதிகளில்; இறங்கி கலவரத்தில் ஈடுபட்டதுடன், வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்குப் பொலிசார் சென்றபோது யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜேவர்தனவும் அவிடத்திற்குச் சென்றிருந்தார். கலகக்காரர்கள் அவரைச் சுற்றி வளைத்தனர். இளைஞனைச் சுட்டுக் கொன்ற இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என சாள்ஸ் விஜேவர்தன அவிடத்தில் தெரிவித்தார். 

ஆயினும் மீண்டும் கலவரம் வெடித்தது. பொலிசார் கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல் நடத்தினர். பொலிசாரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. அப்போது, நான்கு மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தவர்களினால் பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜேவர்தன கடத்திச் செல்லப்பட்டார். அதன் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டார் அவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. மல்லாகம் நீதிமன்ற நீதிவான் மரண விசாரணை நடத்தி சடலத்தை ஒப்படைத்தார். இவ்வளவும் 2005 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நடைபெற்றிருந்தன. 

ஆனால் சுமார் 4 வருடங்களின் பின்னர், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜேவர்தனவைக் கொலை செய்ததாகக் கூறி,  வவுனியா மனிக்பாம் முகாமில் இருந்த பாலசிங்கம் பிரவீன் சுகராஜ் அல்லது பவநீதரன் என்பவரை சந்தேகத்தின்பேரில்,  பொலிசார் கைது செய்திருந்தனர். பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜேவர்தனவைக் கொலை செய்ததாக அவருக்கு எதிராகவே சட்டமா அதிபரினால் பயங்கரவாதத்  தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 6 வருட காலமாக இந்த வழக்கில் எதிரியாகக் குறிப்பிடப்பட்ட பாலசிங்கம் பிரவீன் சுகராஜ் அல்லது பவநீதரன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று, 3 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் எதிரியாகக் குறிப்பிடப்பட்டிருந்த பாலசிங்கம் பிரவீன் சுகராஜ் அல்லது பவநீதரன் வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், தனக்கும் இந்தக் கொலைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையெனவும், 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 2009 ஆம் ஆண்டு தன்னைக் கைது செய்ததாகவும் தெரிவித்து, தனக்கு எதிரான கொலைக்குற்றச் சாட்டை மறுத்திருந்தார். 

இந்த வழக்கில் 3 சிவிலியன் சாட்சியங்களும் 4 பொலிஸ் சாட்சியங்களும் அழைக்கப்பட்டனர். சிவிலியன் சாட்சிகளில் ஒருவராகிய பிரகாஸ் என்பவர், பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜேவர்தனவின் கொலைச்சம்வத்தில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்ததன் பின்னர், விடுதலை செய்யப்பட்டவராவார். அவர்தான் முதலாவது சிவில் சாட்சியாகும.; இவர் 2005 ஆம் ஆண்டு சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்தவர். 
கொலை நடந்து முடிந்த மறுநாள் யாழ் குடாநாட்டுப் பத்திரிகையொன்றில் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்டிருந்த புகைப்படம் வெளியாகியிருந்தது. அந்தப் புகைப்படத்தில் இந்த சாட்சியாகிய பிரகாஸ் இருந்தார். அதனைச் சுட்டிக்காட்டிய பொலிசார், கொலைச் சம்பவத்திற்கும், அவருக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறி, அவரைக் கைது செய்திருந்தனர். 

சம்பவ இடத்தில் ஏற்பட்டிருந்த கலவரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, பொலிசார் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் செய்தபோது தான் அணிந்திருந்த பச்சை நிற ரீசேட்டை கழற்றி முகத்தைத் துடைத்ததாகவும், அப்போது, எல்ரீரீயைச் சேர்ந்த சிவா என்பவர் சாள்ஸ் விஜேவர்தன அணிந்திருந்த பொலிஸ் சீருடையைக் கழற்றிவிட்டு, தனது பச்சைநிற ரீ சேட்டை தன்னிடமிருந்து பறித்தெடுத்து அவருக்கு அணிவித்ததாக என்று ஒப்புக்கொண்டிருந்தார். இந்த பச்சை நிற ரீசேட்டுடன் தான் சாள்ஸ் விஜேவர்தனவின் சடலம் பின்னர் கைப்பற்றப்பட்டிருந்தது. 

எனவே, இந்த நிலையில் கொலையுண்டவரின் சடலத்தில் காணப்பட்ட பச்சை நிற ரீசேட்டின் உரிமையாளராகிய  பிரகாஸ் குற்றத்திற்கு உடந்தையாளியா, குற்ற உடந்தையாளியாக இருந்தால் சட்டமா அதிபரின் நிபந்தனையுடனான மன்னிப்பைப் பெறாமல், இவரை அரச சாட்சியாகப் பாவிக்க முடியாது. எனவே சிவிலியன் சாட்சிகளில் முதலாவது சாட்சியாகிய பிரகாஸ் என்பவர் நம்பகமற்ற சாட்சி என நிராகரித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

பொலிஸ் சாட்சியங்கள் அழைக்கப்பட்டு சாட்சியமளிக்கப்பட்டபோது, அதில் எந்தவொரு சாட்சியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த எதிரியை அடையாளம் காட்டவில்லை விடுதலைப்புலி உறுப்பினராகிய ஒரு கை இல்லாத கோபி என்ற நபரே, இக்கொலையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டவர் என தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பொலிசார் சாட்சியமளித்தனரே தவிர, இந்த வழக்கின் எதிரிக்கு எதிராக எவருமே சாட்சியமளிக்கவில்லை என்பதையும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

அதேவேளை, மன்றி;ல் சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி தனது சாட்சியத்தில் கொலையுடன் சம்பந்தப்பட்டவராகத் தான் அறிந்திருந்த நபராகிய கோபிக்கு ஒரு கை இல்லை எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றத்தில் பாலசிங்கம் பிரவீன் சுகராஜ் அல்லது பவநீதரன் என்பவரே எதிரயாக நிறுத்தப்பட்டிருந்தார். அவருக்கு அங்கவீனம் எதுவுமில்லை. அவருக்கு இரண்டு கைகளும் இருந்தன. இதனை அவதானித்த நீதிபதி, பொலிஸ் அதிகாரி தனது சாட்சியத்தில் குறிப்பிட்ட, அந்த கோபி என்ற நபர் நீதிமன்றத்தில் நிற்கின்றாரா என பொலிசாரிடம் வினா தொடுத்தபோது அவர் அங்கு இல்லையென்றும் அவர் சாட்சியமளித்தார். 

எனவே எதிரியாகக் கருதப்பட்ட, ஒரு கை இல்லாத நபராகிய கோபி நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. ஆனால், நீதிமன்றத்தில் எதிரியாக பாலசிங்கம் பிரவீன் சுகராஜ் அல்லது பவநீதரன் என்ற இரண்டு கைகளும் உள்ள ஒருவரே நிறுத்தப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிபதி சாட்சியத்தில் உள்ள முரண்பாட்டையும் எடுத்துக்காட்டினார். 

அத்துடன் நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் விசேடமாக குறிப்பிட்டுள்ளதாவது: 

இறந்த சாள்ஸ் விஜேவர்தன யாழ்ப்பாணத்தின் அதியுயர் பொலிஸ் அதிகாரியாவார். யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலமாகிய 04.08.2005 ஆம் திகதி இக்கொலை நடைபெற்ற போதிலும், பொலிசாரினால் எந்தவொரு சந்தேக நபரும் உனடடியாகக் கைது செய்யப்படவில்லை. 

கொலை செய்யப்பட்டவர் ஒரு பொலிஸ் உயரதிகாரியாக இருந்த போதிலும், ஒழங்கீனமான பொலிஸ் விசாரணை நடைபெற்றுள்ளது, அத்துடன் ஒழுங்கீனமான புலனாய்வே நடைபெற்றுள்ளது, மிகவும் கவனயீனமான விசாரணையும் நடைபெற்றுள்ளது. 

அதேநேரம் இந்த வழக்கில் விடுதலைப்புலி உறுப்பினர்களான கோபி மற்றும் சிவா என்பவர்களுடைய பெயர்கள் வழக்குத் தொடுநர் தரப்பின் சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அவர்கள் கைது செய்யப்படவில்லை. இந்தக் கொலையை அவர்கள்தான் செய்தார்கள் என்று எதிரிகளாகப் பெயரிடப்படவுமில்லை. கொலையைச் செய்தவர் என கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட எதிரியாகிய பாலசிங்கம் பிரவீன் சுகராஜ் அல்லது பவநீதரனுக்கு எதிராக எந்தவொரு பொலிஸ் சாட்சியமும் அளிக்கப்படவில்லை என்பதை விசேடமாக நீதிபதி இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார் 

கொலைக்குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பாலசிங்கம் பிரவீன் சுகராஜ் அல்லது பவநீதரன் என்ற எதிரிதான் கொலையில் ஈடுபட்டார் என்பதற்கான கண்கண்ட சாட்சியமோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியமோ இல்லை. எனவே, ஒழுங்கான பொலிஸ் புலனாய்வு இடம்பெறாமல், விசாரணைகள் இடம்பெற்று, குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

கொலைச் சம்பவம் நடைபெற்று  கிட்டத்தட்ட 4 வருடங்களின் பின்னர், வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த பாலசிங்கம் பிரவீன் சுகராஜ் அல்லது பவநீதரன் என்பவரைக் கைது அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்குத் தொடுநர் எதிரிக்கு எதிரான கொலைக் குற்றத்தை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் எண்பிக்கத் தவறியுள்ளார் என தெரிவித்து, எதிரியை விடுதலை செய்யுமாறு நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்த வழக்கில் எரியாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த பாலசிங்கம் பிரவீன் சுகராஜ் அல்லது பவநீதரன் சுமார் 6 வருட கால சிறைவாசத்தின் பின்னர் விடுதலை பெற்று, நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக வீடு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

« PREV
NEXT »

No comments