Latest News

September 05, 2015

'சர்வதேச விசாரணை' கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை இரண்டாவது நாளாகவும்
by admin - 0

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டையொன்று நடைபெற்று வருகின்றது. இன்று சனிக்கிழமை இரண்டாவது நாளாக இந்தக் கையெழுத்து வேட்டை நடந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள 'சர்வதேச விசாரணை பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு அமைப்பின்' முன்னெடுப்பில் இந்த கையெழுத்துக்களை திரட்டும் பணி நடந்துவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் இந்தக் கையெழுத்து திரட்டும் செயற்பாட்டில் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

உள்ளக விசாரணையில் பலனில்லை என்றும் சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதி கிடைக்கும் என்றும் இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

ஐநா மனித உரிமைப் பேரவையின் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளதன்படி, மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டிருக்கின்ற ஒரு சந்தர்ப்பத்தில் அது தொடர்பான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும்போது பாதிக்கப்பட்ட தரப்பினருடைய கருத்துக்களையும் கவனத்தில்கொண்டே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதாக கஜேந்திரன் கூறினார்.


அதற்காகவே, உள்ளக விசாரணையில் பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லை என்றும் சர்வதேச விசாரணையே தேவை என்றும் வலியுறுத்துவதற்கான இந்தக் கையெழுத்து வேட்டை நடைபெற்று வருவதாக கஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களே ஐநா மனித உரிமைகள் பேரவையினால் திரட்டப்பட்டிருக்கின்றன என்றும் பாதிக்கப்பட்டவர்களிடமோ அல்லது பாதிப்பு எற்படுத்தியவர்களிடமோ எந்தவிதமான விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

'ஐநா மனித உரிமைப் பேரவையினால் திரட்டப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் என்ன நடந்திருக்கின்றது என்பதை விசாரணை அறிக்கை வெளியிடும். அதற்கமைவாக நடத்தப்படுவதே விசாரணையாகும். அந்த விசாரணை சர்வதேச விசாரணையாக இருக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு' என்றும் கஜேந்திரன் தெரிவித்தார்.

எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இந்த கையெழுத்து வேட்டை தொடரும் என்றும், அதன் பின்னர் ஐநா மனித உரிமைப் பேரவையின் அறிக்கை வெளியிடும் நாள் வரையில் சுழற்சி முறையிலான சாத்வீகப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments