Latest News

September 19, 2015

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன – சிவில் சமூக அமைப்புக்கள்
by admin - 0

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக சிவில் சமூக அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. 39 சிவில் சமூக அமைப்புக்களும் 14 சிவில் சமூக அமைப்புக்களும் கூட்டாக இணைந்து இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளன. 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னரும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


தமிழ் சிவிலியன்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படல், காண்காணிப்புக்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டு குழுக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மீது சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினர் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளன.


கடத்தல்கள், கைதுகள், பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இலங்கையில் இடம்பெற்று வரும் அடக்குமுறைகள் சித்திரவதைகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் இந்த அமைப்புக்கள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.


குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தற்போதைய அரசாங்கமும் ஆர்வம் காட்டுவதில்லை என்ற நிலைமை நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளன.


படையினர் சார் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரம் தொடர்ந்தும் கேள்விக்குறியதாகவே காணப்படுகின்றது என தெரிவித்துள்ளன.


இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் நிரந்தரக் காரியாலயமொன்று இலங்கையில் நிறுவப்பட வேண்டுமென இந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டியது அவசியமானது என கோரியுள்ளன. குரோத உணர்வைத் தூண்டும் பேச்சுக்கள், சட்டவிரோத கடத்தல்கள் காணாமல் போதல்கள் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படக்கூடிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.


நிசாந்த உதலகம அறிக்கையின் முடிவுகளை வெளியிட அரசாங்கம் அளித்த வாக்குறுதி வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது. சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

« PREV
NEXT »

No comments