Latest News

August 29, 2015

ஓமந்தை சோதனைச் சாவடியில் இன்று முதல் 'சோதனை இல்லை'!
by Unknown - 0

இலங்கையின் வடக்கே, வவுனியாவுக்கு அப்பால் ஏ-9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஏ-9 வீதியூடாக நாட்டின் வடபகுதியிலிருந்து தென்பகுதிக்கும் தெற்கிலிருந்து வடக்குக்கும் பயணிக்கும் பயணிகளின் வசதி கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

ஓமந்தை இறம்பைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த சோதனைச்சாவடி யுத்த மோதல்கள் நடந்த காலம் தொட்டு இயங்கி வந்துள்ளது.

யுத்த காலத்தில், இரண்டு நாடுகளுக்கிடையிலான சோதனைச்சாவடியைப் போன்று இங்கு சோதனைகள் நடந்துவந்தன. வாகனங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னரே பயணிக்க அனுமதிக்கப்பட்டு வந்தன. பொருட்களை ஏற்றி வருகின்ற வாகனங்களில் இருந்து பொருட்களும் இறக்கி சோதனையிடப்பட்டிருந்தன.

யுத்தம் முடிந்த பின்னர், பயணிகளின் பொதிகள் சோதனையிடப்படுவது நிறுத்தப்பட்டு, அவர்களின் ஆள் அடையாள ஆவணங்கள் சோதிக்கப்பட்டுவந்தன. இதற்காக பயணிகள் வாகனங்களில் இருந்து இறங்கி நடந்து சென்று சோதனை முடிந்த பின்னர் மீண்டும் தமது வாகனங்களில் ஏறிச் செல்லும் நடைமுறை இருந்தது.

பின்னர், பயணிகளைச் சோதனையிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்தது. வாகனங்களில் இருந்து பொருட்களை இறக்கி ஏற்றும் நடவடிக்கையிலும் தளர்வு ஏற்பட்டிருந்தது. ஆயினும் வாகனங்களைப் பதிவு செய்யும் நடைமுறை தொடர்ந்தும் இருந்துவந்தது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், தனியான கருமபீடம் ஒன்றில் பதிவு செய்யப்பட்ட பின்னரே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

வாகனங்களும் பொதுமக்களும் பிரதான வீதியில் இருந்து உட்பக்கமாக, அதற்கென அமைக்கப்பட்டுள்ள பகுதிக்குள், அதற்கென அமைக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் ஊடாகச் செல்ல வேண்டிய நடைமுறையே இருந்துவந்தது.

'மேலிடத்து உத்தரவு'

இன்று சனிக்கிழமை முதல் இவ்வாறான பதிவு நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட்டு, பிரதான வீதி வழியாக எந்தவித தடங்கலுமின்றி வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கான உத்தரவை இராணுவ தலைமைப்பீடம் வழங்கியிருக்கின்றது.

புதிய உத்தரவையடுத்து, வெறிச்சோடிக்கிடக்கின்ற ஓமந்தை சோதனைச்சாவடியில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, மேலிடத்தில் இருந்து தங்களுக்குக் கிடைத்த உத்தரவையடுத்து வாகனங்களின் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு வாகனங்கள் நேரடியாக எந்தவிதத் தடையுமின்றி செல்வதற்குத் தாங்கள் அனுமதித்திருப்பதாகக் கூறினார்.

அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைவாக ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியின் சோதனை மற்றும் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 8 ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து பெப்ரவரி 2 ஆம் திகதி ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை மற்றும் வாகனப் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பபட்டன. ஆயினும் இரண்டு தினங்களில் மீண்டும் அந்த நடவடிக்கை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.

இப்போது, பொதுத் தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து, இரண்டாவது முறையாக ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை மற்றும் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
« PREV
NEXT »

No comments