Latest News

August 03, 2015

ஆம்பளையா இருந்தா என்னைச் சுடு பார்ப்போம்.. போலீஸாரிடம் கொந்தளித்த வைகோ
by admin - 0

லிங்கப்பட்டி: நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் மதுக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய மதிமுகவினர் மீது போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசித் தாக்கியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாலும் ஆவேசமடைந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தைரியம் இருந்தால், ஆம்பளையா இருந்தால் என்னைச் சுடு பார்ப்போம் என்று போலீஸாரிடம் கோபாவேசம் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பெரும் பதற்றத்தில் இருந்து வருகிறது கலிங்கப்பட்டி. அங்கு தற்போது நெல்லை சரக டிஐஜி முருகன், மாவட்ட எஸ்.பி. விக்கிரமன் ஆகியோர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் வைகோவிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து மது விலக்குப் போராட்டத்தை வைகோ கையில் எடுத்துள்ளார். தனது சொந்த கிராமமான கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மதிமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். கலிங்கப்பட்டியில் வைகோவின் தாயார் 94 வயதான மாரியம்மாள் நேரடியாக போராட்டத்தில் குதித்தார். அவரது தலைமையில் கலிங்கப்பட்டி கிராமத்தினர் நேற்று முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று கலிங்கப்பட்டிக்கு வர வைகோவுக்குத் தடை விதித்தனர் போலீஸார். இந்த நிலைியல் இன்று காலை வைகோ கலிங்கப்பட்டிக்கு வந்தார். பின்னர் கிராமத்தினருடன் இணைந்து அவர் போராட்டத்தில் குதித்தார். இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டனர். இந்த சமயத்தில் மதிமுகவினர் சிலர் கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை அடித்து உடைத்து சூறையாடினர். இதனால் போலீஸார் தடியடியில் இறங்கினர். மதிமுகவினரை தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டனர். ஆனால் நிலைமை மோசமாகவே கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். மேலும் போராட்டக் களத்தில் இருந்த பத்திரிகையாளர்களும் தாக்குதலில் சிக்கினர்.

இதைப் பார்த்து கோபமடைந்த வைகோ தான் அமர்ந்திருந்த வாகனத்திலிருந்து இறங்கினார். கூடியிருந்த செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசுகையில், 'அமைதியாக போராட்டம் நடந்தது. அப்போது எங்கள் தொண்டர்கள் இங்கே இருந்த மதுபானக் கடையை அடித்து நொறுக்கினார்கள். அப்போது போலீசாருக்கும், எங்களது தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில் எங்கள் கட்சித் தொண்டர் ஒருவர் கல்லை எடுத்து எறிந்தார். நாங்கள் அவரைப் பிடித்து அடித்திருக்கிறோம். ஆனால், அதற்குள் காவல்துறையினர் எங்கள் கட்சியினர் மீது தடியடி நடத்தியுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளனர். அதேபோல், என் மீதும் 6 கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஏன் என்மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி வேண்டும். என்னை கொல்வதற்காகவா. அப்படியே நான் செத்தாலும் கவலைப்பட மாட்டேன். அதுவும் எனது சொந்த ஊரில், நான் பிறந்த இந்த மன்னில் சாவது எனக்கு பெருமைதான் என்று கூறிய வைகோ அங்கிருந்த போலீஸாரைப் பார்த்து ஆம்பளையா இருந்தா என்னைச் சுடு. நான் தனியாக வருகிறேன். என்னைச் சுடு என்றார் கோபமாக. 

தொடர்ந்து கலிங்கப்பட்டியில் பதட்டம் நிலவுகிறது. போராட்டம் தொடர்ந்தால், நிலைமை மோசமானால் வைகோ கைது செய்யப்படக் கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. எஸ்.பியுடன் வாக்குவாதம் இந்த நிலையில் போராட்டத்தின்போது வைகோ இருந்த வாகனத்திற்கு அருகே வந்த நெல்லை எஸ்.பி. விக்கிரமன், பிரச்சினை செய்யாதீர்கள் என்று வைகோவைப் பார்த்துக் கூற அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வைகோ. புதிய தலைமுறை கேமராமேன் மீது தாக்குதல் முன்னதாக போலீஸார் நடத்திய கடும் தாக்குதலில் சிக்கி புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் படுகாயமடைந்தார். தலையில் காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டுள்ளார்.

« PREV
NEXT »

No comments