Latest News

August 20, 2015

கூட்டமைப்பின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை துல்லியமாகத் தெரிகின்றது : உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்
by admin - 0

நடைபெற்று முடிந்த  தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ள ஆசனங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும், எந்த அளவிற்கு விசமப் பரப்புரைகள் செய்யப்பட்டிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது எமது மக்கள் கொண்டுள்ள நீங்காத நம்பிக்கை அவர்கள் வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, துல்லியமாகத் தெரிகின்றது.   

இந்த தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளன. எவ்வித சலனமோ அன்றி அச்சமோ இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொண்டு எமது மக்கள் அவர்கள் வெற்றிவாகை சூடும்படியாக தங்கள் ஆதரவை அளித்துள்ளார்கள்.   

எனவே எமது மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது கொண்டுள்ள நம்பிக்கைகளையும் தாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் மனதில் இருத்தி, திரு சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற அங்கத்தவர்கள், தங்கள் பணிகளை தொடரவேண்டும். அதுவே தமிழ் மக்கள் விரும்புகின்ற அடுத்த படியாகும்” இவ்வாறு நடந்து முடிந்து நாடாளுமன்றத்  தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ள மாபெரும் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர், கனடா வாழ் திரு வி. எஸ்.துரைராஜா மற்றும் இயக்கத்தின் செயலாளர் நாயகம், ஜேர்மனி வாழ் திரு துரை. கணேசலிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள மேற்படி அறிக்கையில் தொடர்ந்து கூறப்பட்டுள்ளதாவது:-   

கடந்த திங்கட்கிழமையன்று இலங்கையில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் உலகத்திற்கு பல செய்திகளைச் சொல்லுகின்றது. நாட்டின் வளர்ச்சியைக் கவனத்திலெடுக்காமல் தமது குடும்ப நலன்களையும் சொந்த விருப்புகளையும் கருத்திற் கொண்ட அரசியல்வாதிகளுக்கு இனி இலங்கையில் வெற்றிபெறும் வாய்ப்புக்கள் இருக்கவே இருக்காது என்ற மிகவும் அழுத்தமான செய்தி இந்த தேர்தல் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.   மேலும் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் இருப்பைக் காப்பாற்றவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிராகவும் சிங்கள கடும் போக்காளர்களால் புனையப்பட்டு பரப்பி விடப்பட்ட கட்டுக்கதைகளை முறியடிக்கும் வகையிலும, எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர்ச்சியான அடக்குமுறைகள் மற்றும் அநீதிகள் என்பவற்றிலிருந்து மீட்சி பெற வேண்டுமாயின் நாம் முதலில் அரசியல் பலம் பெற வேண்டும் என்பதையும் எமது மக்கள் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள். 

மேற்சொன்ன காரணங்களுக்காகவே எமது தமிழ மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் தமது தன்மான உணர்வை தமது புள்ளடிகள் மூலம் வெளிகாட்டியுள்ளார்கள்.   மேலும் 2009ம் ஆண்டு காலப்பகுதியிலும் அதனைத் தொடர்ந்து வந்த நாட்களிலும் எமது மக்கள் வாழ்வதா? அல்லது சாவதா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்கள். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வலிமை பற்றியும், அதன் அவசியம் பற்றியும் உணர்ந்து கொண்ட எமது மக்கள், தமது வாக்குரிமையை முறையாகப் பயன்படுத்தியுள்ளார்கள்.   

அத்துடன் எமது மக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த வேளையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நடந்து முடிந்த தேர்தலில் எமது மக்கள் அளித்துள்ள ஆதரவானது, மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
« PREV
NEXT »

No comments