Latest News

August 26, 2015

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நியமனம்! பங்காளி கட்சிகள் முறுகல்
by Unknown - 0

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில் பங்காளி கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. 

தேசிய பட்டியல் தெரிவானது மோசமானதும், நியாயமற்றதுமான தெரிவாகும் என சுட்டிக்காட்டியிருக்கும் கூட்டமைப்பின் 3 அங்கத்தவக் கட்சிகள், குறித்த தெரிவு கூட்டமைப்பின் தெரிவில்ல தனியே தமிழரசுக் கட்சியின் தெரிவேயாகும் எனவும் குற்றஞ் சாட்டியிருக்கின்றன.

நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் குறி த்த கட்சிக்கு 2 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தது.

இந்நிலையில் குறித்த ஆசனங்களை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில், தேர்தலுக்கு பின்னான கடந்த சில தினங்களாக கடுமையான இழுபறி நிலை உருவாகியிருந்தது. கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான புளொட், ஈ.பி.ஆர். எல்.எவ், ரெலோ, ஆகியன மேற்படி 2 தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றை தமக்கு வழங்க வேண்டும் எனவும் அந்த ஆசனத்திற்கு 3 கட்சிகளாலும், ஒத்துக்கொள்ளப்படும் ஒருவருக்கு அல்லது இருவருக்கு (சுழற்சி முறையில்) வழங்குவது எனவும் தீர்மானித்து கூட்டமைப்பின் தலமையுடன் இது விடயமாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன.

ஈ.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் ஆகியன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவருமான, சுரேஸ் பிறேமச்சந்திரனின் பெயரை முன்மொழிந்திருந்த நிலையில், ரெலொ 4 பேரின் பெயர்களை முன்வைத்திருந்தது. இந்நிலையில் மேற்படி 3 அங்கத்துவக் கட்சிகளாலும் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு அல்லது இருவருக்கு (சுழற்சிமுறையில்) வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் விடுத்திருந்தனர்.

இதனை விடவும் வடகிழக்கு மாகாணங்களில் பலருடைய பெயர்கள் முன்வைக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். என உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன் பல வழிகளில் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த 2 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிழக்கில் துரைரட்ணசிங்கம் மற்றும் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி சி.சாந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே கூட்டமைப்பின் 4 கட்சிகளில் 3 அங்கத்துவக் கட்சிகள் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர்.

இது குறித்து புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் கருத்து தெரிவிக்கையில், தமிழ்தேசிய கூட்டமைப்பில் 4 கட்சிகள் அங்கத்துவம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில் 4 கட்சிகளும் இணைந்து இந்த தீர்மானத்தை அல்லது தெரிவை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெற்றிருக்கவில்லை. இந்நிலையில் இந்த தெரிவு ஒரு நியாயமற்ற தெரிவாகவே நாங்கள் பார்க்க வேண்டியிருக்கின்றது.

இதே இடத்தில் நாங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனின் பெயரை முன்மொழி ந்திருந்தோம். ஆனால் அதற்குப் பின்னர் ரெலோ அமைப்பு மேலும் 4பேரின் பெயர்களை முன்வைத்திருக்கின்றார்கள் எனவே தமிழரசு கட்சி தவிர்ந்து, மற்றைய 3 கட்சிகளிடம் கூட ஒற்றுமையான நிலைப்பாடு இருந்திருக்கவில்லை. என்பதையும் நாங்கள் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்றார்.

இதேவேளை ரெலோ அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், வட மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த விடயம் தொடர்பாக தமது அமைப்பின் மத்திய குழு நாளை(இன்றைய தினம்) கூடவுள்ளதாகவும் அதனடிப்படையிலேயே கருத்துக்களை கூற முடியும் எனவும் கருத்து தெரிவித்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில், இது ஒட்டுமொத்தமாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் முடிவாக எடுத்துக் கொள்ள முடியாது. இது தமிழ்தேசிய கூட்டமைப்பினதும், தமிழரசு கட்சியினதும் சில தலைவர்கள் சுயமாக எடுத்துக் கொண்ட முடிவாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது 4 கட்சிகளின் கூட்டு இங்கே எடுக்கப்படுகின்ற முடிவுகள் 4 கட்சிகளினதும் ஒத்துழைப்புடன் அல்லது உடன்பாட்டுடன் எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் வாதம்.

இந்நிலையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் 3 இணைந்து 5 நபர்களின் பெயர்களை முன்வைத்திருக்கும் நிலையில் அதைனை கருத்தில் எடுக்காமல் தங்களுடைய தீர்மானங்களை நிறைவேற்றுவதை ஒத்துக் கொள்ள முடியாது என்பதுடன் இது நான் முன்னர் சொன்ன சில நபர்களின் எண்ணங்களை ஈடேற்றுவதற்கான முயற்சியும் ஆகும் என்பது மட்மல்லமல், நியாயமற்றதும், அபத்தமானதுமான முடிவாகும். என தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments