Latest News

August 24, 2015

தமிழரசுக் கட்சியின் செயல் வெட்கம் கெட்டத்தனமானது: சுரேஷ் பிரேமச்சந்திரன்
by Unknown - 0

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான முடிவு என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல என்றும், அது தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் தோல்வியடைந்ததையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவரான அவருக்கு தேசிய பட்டியலில் இடமளிக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் மற்ற கட்சித்தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆயினும் அந்தக் கோரிக்கை தொடர்பில் சரியான முடிவு எடுக்காமல் தமிழரசுக்கட்சி தனது விருப்பத்திற்கு இரண்டு பேரை தேசியப்பட்டியல் உறுப்பிளர்களாக நியமித்திருப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.

இந்த கோரிக்கை தொடர்பில் திருகோணமலையில் இரண்டு முக்கிய பேச்சுவார்ததைகள் நடைபெற்றிருந்தபோதிலும், பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

"தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான தேசியப் பட்டியலுக்கு தமிழரசு கட்சியில் இருக்கும் சில நபர்கள் தமது கட்சியின் இரண்டு உறுப்பினர்களை நியமித்திருப்பது, கூட்டமைப்பில் இருக்கும் தமிழரசு கட்சி தவிர்த்த மற்ற கட்சிகளுக்கு ஏற்புடைய செயலல்ல. எல்லோரும் சேர்ந்து விதை விதைப்பதும், அறுவடை செய்யும்போது தமிழரசு கட்சி மட்டும் செய்துகொண்டு போவது என்பதும் ஆரோக்கியமான அரசியலுக்கும் நல்லதல்ல; ஒரு கூட்டமைப்பு தத்துவங்களுக்கும் நல்லதல்ல; ஆனால் இதனை மிகவும் வெட்கம் கெட்டத்தனமாக தமிழரசு கட்சி தொடர்ந்து செய்கிறது என்பதுதான் ஒரு விடயம்" என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

அதேசமயம், இந்த பிரச்சனை குறித்து தமது கட்சி இரண்டொரு தினங்களில் விரிவானதொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், இதுகுறித்த விரிவானதொரு நேர்காணலை வழங்குவதற்குத் தற்போது தான் தயாரில்லை என்றும், சுருக்கமானதொரு கருத்தை மட்டுமே இப்போது தன்னால் தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
« PREV
NEXT »

No comments