Latest News

August 22, 2015

போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு தேர்தல் முடிவு மூலம் விடிவு கிடைக்குமா?-பேராசிரியர் இராமு.மணிவண்ணன்
by Unknown - 0

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை பேராசிரியர் இராமு.மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுள்ள இடங்களுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ள இடங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஐ.தே. கட்சி கூடுதலாகப் பெற்றது 11 இடங்கள் மட்டுமே.

இந்தத் தேர்தல் மூலமாக, ‘சிங்களப் பேரினவாதம்’ என்பதற்கு எந்தவித வீழ்ச்சியும் ஏற்பட்டுவிடவில்லை. ராஜபக்‌சவின் கட்சி தோல்வியடைந்தாலும், அது ஒரு வலுவான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டணி ரணிலுக்கு ஆதரவு அளிக்கிறது. தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்றாமல், தமிழர்களின் நிலத்தை மீட்காமல், தமிழர்களுக்கு நில உரிமை வழங்காமல், அவர்களின் வாழ்வுரிமையில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டணியால் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். உரிமைகளுக்கான போராட்டத்தை இவர்கள் நடத்தினால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

ஆனால், அதை அவர்கள் செய்வார்களா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அவர்களிடம் அதை நான் எதிர்பார்க்கவில்லை.

தமிழ் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த இருவரை அல்லது ஒருவரையாவது அமைச்சரவைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் சம்பந்தன், ரணில் ஆகிய இருவருக்குமே உண்டு.

இந்த நிலையில், இவர்களுக்குப் பதவியா? அல்லது தமிழர்களுக்கு உரிமையா? என்றுதான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

நில மீட்பு இல்லாமல், இராணுவ வெளியேற்றம் இல்லாமல் இவர்கள் அமைச்சரவைக்குப் போனால், நம்முடைய ஆள் அதிகாரத்தில் இருக்கிறார் என்கிற எண்ணம் வேண்டுமானால், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படும். அவ்வளவுதான்.

20-வது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வருவோம் என்றெல்லாம் ரணில் சொல்லியிருக்கிறார். மூன்றில் இரண்டு பங்கு பலம் இருந்தால் மட்டுமே அதையெல்லாம் செய்ய முடியும்.

தற்போதைய பலத்தை வைத்துக்கொண்டு முக்கியமான மாற்றங்கள் எதையும் அவரால் கொண்டுவர இயலாது.

இலங்கையில் நடந்த இனப் படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிக முக்கியமானது.

ரணில் கட்சி, ராஜபக்‌ச கட்சி என இரண்டுமே அதை ஏற்கவில்லை. உள்நாட்டு விசாரணை நடந்தாலும் கூட, பன்னாட்டு நீதிமன்றத்தில் யாரையும் இவர்கள் முன்னிறுத்த மாட்டார்கள்.

ஆகையால், தமிழர்களுக்கான நீதியைப் பெறுவதற்கு என்ன போராட்டம் நடத்த வேண்டுமோ, அதை நடத்தித்தான் பெற வேண்டும்” என்றார்.

தனது கட்சியின் வெற்றி உறுதியான நிலையில், “இலங்கை மக்கள் அனைவரும் சம அந்தஸ்துடன், இணக்கத்துடன் வாழக்கூடிய புதிய தேசத்தை உருவாக்குவோம்” என்று அழைப்பு விடுக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ரணில்.

அதை அவர் செயலில் காட்டுவாரா? என்பது போகப்போகத்தான் தெரியும்.
« PREV
NEXT »

No comments