Latest News

August 21, 2015

இம்முறையாவது 5 ஆண்டுகாலம் முழுமையாக பிரதமர் பதவியில் நீடிப்பாரா ரணில்?
by Unknown - 0

இலங்கையின் பிரதமராக 4-வது முறையாக ரணில் பதவியேற்றுக் கொண்டதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்..அதே நேரத்தில் இதுவரை 5 ஆண்டுகாலம் முழுமையாக ரணில் பிரதமராக பதவி வகித்தது இல்லை.. இம்முறையாவது பதவி காலத்தை முழுமையாக ரணில் அனுபவிப்பாரா என்ற ஏக்கம் அவரது தொண்டர்களிடத்தில் உருவாகி உள்ளது. 

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி 106 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று ரணில் அந்நாட்டின் பிரதமராக 4வது முறையாக பொறுப்பேற்றார். அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவி ஏற்றார்.

1993-ல் முதல் முறையாக 

இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே 1993ஆம் ஆண்டு மே 7-ந் தேதி முதல் முறையாக பதவியேற்றார். அப்போது அதிபராக இருந்த பிரேமதாச குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரதமராக இருந்த டி.பி.விஜேதுங்க அதிபராகப் பதவியேற்றார். இதனால் பிரதமரான ரணில் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி வரை பதவி வகித்தார்.

ஆப்பு வைத்த சந்திரிகா 

இதன் பின்னர் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று டிசம்பர் 9-ந் தேதி பிரதமராக பதவியேற்றார். ஆனால் அதிபராக இருந்த சந்திரிகா குமாரதுங்க திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதனால் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதியன்று ரணில் பிரதமர் பதவியை இழந்தார்.

8 மாத பிரதமர்

 3வது முறையாக கடந்த ஜனவரி 8-ந் தேதி அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற மறுநாளே பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டார். கடந்த 8 மாதங்கள் மட்டுமே பிரதமராக ரணில் இருந்தார். கடந்த 17-ந் தேதி இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

முழுமையாக அனுபவிக்கலை

 ரணில் பதவி வகித்த இந்த 3 முறையுமே 5 ஆண்டுகள் முழுமையாக அவர் பதவி வகித்தது இல்லை. தற்போது ரணில் 4வது முறையாக மீண்டும் பதவியேற்றுள்ளார். இம்முறையாவது ரணில் 5 ஆண்டுகாலம் முழுமையாக பதவி வகிப்பாரா? அல்லது இடையிலேயே கலகக் குரலை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற பீதி ரணில் ஆதரவாளர்களிடம் இப்போதே தொற்றிக் கொண்டுள்ளது. 

விதி வலியது.
« PREV
NEXT »

No comments