Latest News

August 11, 2015

பேராசிரியருக்கு ஆதரவாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
by Unknown - 0

பேராசிரியர் மணிவண்ணனை மீண்டும் துறை தலைவராக நியமிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகம் துறையின் தலைவராக இருப்பவர் கோட்டீஸ்வர பிரசாத். இவரை சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தின் வேறொரு பொறுப்புக்கு நிர்வாகம் மாற்றியது.

இதனையடுத்து அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகம் துறையின் தலைவராக பேராசிரியர் ஆர்.மணிவண்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சில நிர்வாக காரணங்களுக்காக கோட்டீஸ்வர பிரசாத் மீண்டும் துறை தலைவர் பதவிக்கு மாற்றப்பட்டார். இதனால் மணிவண்ணனை துறை தலைவர் பதவியில் இருந்து பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியது. இதற்கு அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகம் துறை மாணவர்கள் கண்டனம் தெரிவித்து கடந்த 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

பேராசிரியர் மணிவண்ணனை மீண்டும் துறை தலைவராக நியமிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். மாணவர்களின் போராட்டத்துக்கு சில பேராசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் போராட்டம் சூடுபிடித்துள்ளது. நேற்று மாலையிலும் பல்கலைக்கழக வளாகத்தில் கூடிய மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து முழக்கமிட்டதோடு அங்கேயே அமர்ந்து இரவுவரை தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

பிரச்சினைக்கு பின்னணி காரணம் 

அண்மையில், மதுவிலக்கு போராட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் பட்டியலை அளிக்குமாறு பேராசிரியர் ராமு மணிவண்ணனிடம் பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், மாணவர்கள் பட்டியலை அவர் அளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று பேராசிரியர் ராமு மணிவண்ணன் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறையின் தலைவர் பொறுப்பில் இருந்து திடீரென விலகினார். 

இதற்கான காரணம் கூறிய அவர், மதுவிலக்கு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் பட்டியலை அளிக்காத காரணத்தாலேயே நான் பதவி விலகச் செய்யப்பட்டுள்ளேன் என்றார். தனக்குப் பதிலாக கோடேஸ்வர பிரசாத், தற்போது அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தன்னிடம் எவ்வித விளக்கத்தையும் கேட்காத பதிவாளர், பொறுப்பை கோடேஸ்வர பிரசாத்திடம் ஒப்படையுங்கள் என்று மட்டும் கூறினார்" என்றும் பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறியுள்ளார். 

இதற்கு முன்னரும் பல்வேறு தருணங்களில் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் பேராசிரியர் ராமு மணிவண்ணணுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பேராசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



« PREV
NEXT »

No comments