Latest News

August 19, 2015

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் இன்று
by admin - 0

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்தின் புனிதத் தன்மையை பாதுகாக்கும் வகையில் ஆலயத்தின் வெளிவீதியை பக்திமயமானதாக வைப்பதற்கு அடியார்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பக்தர்கள், அந்தணர்கள் மற்றும் அனைவரது ஒத்துழைப்பினாலும் காலம் காலமாக இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் வெளிவீதியைச் சுற்றி விளம்பரப் பலகைகள், அரசியல் பதாகைகள் என்பன காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்டு சிவனையும் சக்தியையும் குறிக்கும் சிவப்பு வெள்ளை நிறத்துணிகள் கட்டப்பட்டுள்ளன.

இம்முறை ஆலய சூழலில் நடைபாதை வியாபாரங்கள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நல்லூர் ஆலயத்தின் மஹோற்சவம் தொடர்ச்சியாக 25 தினங்கள் இடம்பெறவுள்ளதையடுத்து நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வுட்லர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆலயச் சுற்றாடலில் விசேட காவல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 600 க்கும் அதிகமான ஆண் பெண் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்தை ஒழுங்கமைக்கும் வகையில் 7 வீதித் தடுப்புக்கள் போடப்பட்டுள்ளதுடன் ஆலய சுற்றாடலிலுள்ள வீதிகளின் சந்திகளில் போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் யாழ்.நகர், நல்லூர் உள்ளிட்ட பிரதேசங்களில் இரவு வேளைகளில் விசேட ரோந்து நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது. அதுமட்டுமின்றி மக்கள் தமது உடைமைகளைப் பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அதேநேரம் உற்சவ காலங்களில் ஏற்படக்கூடிய வகையிலான அனர்த்தங்களைத் தடுக்கும் வகையில் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.






« PREV
NEXT »

No comments