Latest News

August 12, 2015

7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசு வழக்கில் வாதங்கள் நிறைவு- தீர்ப்பு ஒத்திவைப்பு!
by Unknown - 0

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசு மனு மீதான அனைத்து வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ராஜிவ் காந்தி வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இதனைத் தொடர்ந்து ராஜிவ் வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு போனது மத்திய அரசு. இதனிடையே மத்திய அரசு, பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு ஆயுள் தண்டனையாக குறைத்ததை எதிர்த்தும் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றமோ மத்திய அரசின் சீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்து 3 தமிழரின் தூக்கை ரத்து செய்தது சரி என திட்டவட்டமாக கூறியது. இதனைத் தொடர்ந்து 7 தமிழரை விடுதலை செய்வதற்கு அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதா? இல்லையா? என்ற மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தத்து தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக நடைபெற்று வந்தது. 

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற அனைத்து தரப்பு வாதங்களும் இன்றுடன் முடிவடைந்தன. 7 தமிழர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதாடினார். இன்றைய விசாரணையின் போது, 7 தமிழரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினால் ஜனாதிபதியைத்தான் அணுகலாம்; 23 ஆண்டுகாலம் சிறையில் இருந்ததாலேயே விடுதலை செய்துவிடலாம் என்ற தமிழக அரசின் முடிவு சரியல்ல என்று மத்திய அரசு வாதிட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை 1 வார காலத்துக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
« PREV
NEXT »

No comments