Latest News

August 15, 2015

டி கலோ ஜிரோ -61 ஆண்டுகளாகியும் எவருமே தங்காத ஹோட்டல்
by Unknown - 0

இத்தாலியின் சிசிலி தீவில் 1,300 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் 300 அறைகளுடன் மிகப்பிரமாண்டமான ஹோட்டல் டி கலோ ஜிரோ அமைந்துள்ளது.

ஹோட்டலின் மேல் தளத்திலிருந்து பார்த்தால், சிசிலி தீவின் அழகை முழுவதுமாக ரசிக்கலாம்.

ஹோட்டல் அருகே பிரசித்தி பெற்ற தேவாலயமும் பிரபலமான ஸ்பா ஒன்றும் அமைந்துள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு தவறாமல் வருகை தருகின்றனர்.

ஆனாலும், ரம்மியமான ஹோட்டல் கலோ ஜி ரோவில் மட்டும் இது வரை எவரும் தங்கியது இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த ஹோட்டல் 2 முறை புதுப்பிக்கப்பட்டு 4 முறை திறப்பு விழாவும் கண்டுவிட்டது. அப்படி இருந்தும் எவரும் இங்கு தங்காமைக்கான காரணம் சற்று நம்ப முடியாத அளவுக்குத் தான் உள்ளது.

முதன் முதலில் 1954 ஆம் ஆண்டு கலோ ஜிரோ ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

5 மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலைக் கட்டி முடிக்கவே 30 ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.

காரணம், ஹோட்டலை யார் நிர்வகிப்பது என்பதில் பல்வேறு குழப்பங்கள். அதனால் கட்டுமானப் பணியே ஆமை வேகத்தில் நடந்துள்ளது. தட்டுத் தடுமாறி கட்டி முடிக்கப்பட்ட பிறகு அங்கு வேலை செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை.

இந்த குழப்பத்திலயே நிர்வாகத்தினர் ஹோட்டலைக் கைகழுவி விட்டனர். அதற்குள் ஹோட்டலில் பல்வேறு பழுதுகள் ஏற்பட்டுவிட்டன.

யாரும் தங்காமலேயே அது மூடப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு சிசிலி பிராந்திய நிர்வாகம் ஹோட்டலைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து புதுப்பித்தது.

1993 இல் மீண்டும் திறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஹோட்டலில் கழிவு நீர் வெளியேற்று வசதிகள் முறையாக செய்யப்படாததால் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.

நாளடைவில் சீரமைப்புப் பணியும் கிடப்பில் போடப்பட்டது. பின்னர், சில தொழில் கூட்டமைப்புகள் இணைந்து பிராந்திய அரசின் ரூ.6 கோடி நிதி உதவியுடன் ஹோட்டலின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு 1998 இல் திறப்பு விழா நடத்தியது.

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை ஹோட்டலைத் திறந்த வேகத்தில் மூடிவிட்டனர்.

இப்படியே 61 ஆண்டாகியும் அந்த ஹோட்டல் மலை மீது பிரம்மாண்டமாக நிற்கிறதே தவிர, ஒருவர் கூட வந்து தங்கவில்லை.

கோடிக்கணக்கான முதலீடு, நேரம், பலரின் உழைப்பு எல்லாமே வீணாகி இருக்கிறது.

இதற்கு பேய் ஹோட்டல் என்றும் பெயர் வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
« PREV
NEXT »

No comments