Latest News

August 12, 2015

அதிவேக வீதிகளை அமைப்பது நாட்டின் முன்னேற்றம் அல்ல-பேராசிரியர் ஆரியவன்ச திஸாநாயக்க
by Unknown - 0

நாட்டின் முன்னேற்றம் என்பது அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதோ வீதிகளை மேம்படுத்துவதோ, ஹம்பந்தோட்டையில் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை அமைப்பதோ அல்ல. அபிவிருத்தி என்பது நாட்டு மக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதோடு தங்களது வாழ்வில் வறுமை ஏற்படா வண்ணம் வாழ்வதேயாகும் என களனி பல்கலைக்கழகத்தின் பொருளியல்  ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆரியவன்ச திஸாநாயக்க தெரிவித்தார். 

பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஒன்றிணைந்த சங்கத்தின் ஏற்பாட்டினால் இன்று புதன்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இலங்கை அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால்  ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களின் போதே மக்கள் வறுமை இன்றி, பொருளாதார முன்னேற்றத்துடன் வாழ்ந்தார்கள் எனலாம். கடந்த காலங்களில் நாட்டை ஆட்சி செய்தவர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முகமாக கட்டுக்கதைகளையும் பொய்யான வாக்குறுதிகளையும் மக்களுக்கு வழங்கி, அவர்களை ஏமாற்றுகின்றார்கள்' என்றார். 

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட களனி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் எம்.ஓ.டீ.சொய்சா கருத்து தெரிவிக்கையில் 'நாட்டில் நல்லதொரு நாடாளுமன்றம் அமைந்தால், சிறப்பான ஒரு நாட்டைக்கட்டி எழுப்ப முடியும். 1948ஆம் ஆண்டு யாப்பில் நிறுவப்பட்ட ஆட்சிமுறையான கபினெட் ஆட்சி முறையை கொண்டுவரவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரும்புகின்றார். மூன்று துறைகளும் நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டது என்று  நிறுவ அவர் விரும்புகின்றார்' என்றார். 

இவ்வூடக சந்திப்பில் கருத்து தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் பல்வைத்தியத்துறை பேராசிரியர் டாக்டர் சமன்குமார கூறுகையில், 'ரணில் விக்கிரமசிங்க, தனது பஞ்சசீலக் கொள்கையில் ஒன்றாக கல்வி முன்னேற்றம் பற்றி குறிப்பிடுவதை நாங்கள் வரவேற்கின்றோம். கல்வி கற்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் மாத்திரமே இவ்வாறான திட்டங்களை கொண்டுவர முடியும்' என்றார்.
« PREV
NEXT »

No comments