Latest News

August 18, 2015

பொதுத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் உரை!
by Unknown - 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை ஆற்றியிருந்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, 

இந்நாட்டு அரசியல் வரலாற்றில் நடைபெற்ற மிகவும் சமாதானமான தேர்தல் என்றால் நேற்று நடைபெற்ற பொது தேர்தலை கூறலாம்.

நான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட 06 மாத காலப்பகுதியினுள் இந்நாட்டில் ஏற்படுத்த கூடிய மாற்றங்களில் விசேடமாக நல்லாட்சியின் முடிவாக இத் தேர்தல் மிகவும் சமாதானமாக நடை பெற்றதென நான் நம்புகின்றேன்.

கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், நான் போட்டியி்ட்ட தேர்தலுக்கு முன்னரும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்றுள்ள மாற்றங்கள் குறித்து உங்களுக்கு தெரியும்.

ஜனவரி 08 ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது என் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், அதே போன்று பத்தேகம பிரதேசத்தில் தேர்தல் மேடை மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு,

பொலனறுவை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு, அதேபோல் நிவித்திகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும் நாட்டில் ஏனைய பிரதேசங்களில் மிகவும் தீவிரமான சம்பவங்கள் இடம்பெற்றன.

பிரதானமாக அரசாங்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை, அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தியமை, விசேடமான அரசாங்க ஊடகங்கள் ஊடாக ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் அரசாங்கம் செயற்பட்ட முறைகள் தொடர்பில் இந்நாட்டு மக்களுக்கு நினைவில் இருக்கும்.

எனினும் இம்முறை நடைபெற்ற தேர்தல் முற்றிலுமாக மாற்றமடைந்திருந்தமையும் உங்களுக்கு தெரியும். எனவே சமாதானமான முறையில் நடைபெற்ற தேர்தல் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

நான் ஜனாதிபதியாக செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில், வரலாற்றில் முதல் தடவையாக மிகவும் சமாதானமாக தேர்தல் நடைபெற்றமை மிகவும் மகழ்ச்சியான ஒரு விடயமாகும்.

அரசாங்க தலைவர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாது சுயாதீனமாக மத்தியில் செயற்படுவதன் முடிவாகவே சமாதானமான தேர்தல் ஒன்றினை நடாத்த முடியும் என்பதனை இதன் ஊடாக நாங்கள் கற்றுக் கொண்ட பாடமாக இருக்கின்றது.

தனது அரசியல் அதிகாரத்தை பெரிய அளவில் காவல்துறை ஊடாக, அரசாங்க அதிகாரிகள் ஊடாக, தேர்தலுக்கு பயன்படுத்துவதன் மூலம் சமாதானமான மற்றும் சுதந்திரமான தேர்தல் ஒன்றினை நடாத்த முடியாது.

அதனால் தான் எங்கள் தேர்தல் வரலாற்றில் அதிக அளவிலான கருப்பு புள்ளிகள் காணப்படுகின்றது. எனவே இம்முறை எனது நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தி காவல்துறை மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்காமல், திருத்தச்சட்டத்திற்கமைய தேர்தல் ஆணையாளர் மற்றும் அவரது அதிகாரிகளுக்கும்,

காவல்துறையினர் மற்றும் அவர்களின் அதிகாரிகளுக்கும், தேர்தல் கடமைகளுக்கமைய வேட்பு மனு வழங்கிய நாளில் இருந்து இன்று வரையில் செயற்பட்ட அனைத்து நபர்களுக்கும் தங்கள் கடமைகளுக்கு தங்களிடம் காணப்படுகின்ற அதிகாரங்களை கொண்டு சட்ட ரீதியாகவும் சமாதானமாகவும் செயற்படுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

எனவே இதனை குறித்து நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும். தேர்தல் ஆணையாளர் மற்றும் அவரது அனைத்து அதிகாரிகளுக்கும், வாக்குசாவடிகளில் செயற்பட்ட அதிகாரிகள், வாக்கெண்ணும் அதிகாரிகள்,

இந் நடவடிக்கைகளுக்கு அனைத்து முறையிலும் ஆதரவு வழங்கிய மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும், அதேபோல் காவல்துறை அதிபர் உட்பட அவரது அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பிரிவின் இராணுவ பிரதான உட்பட அனைவருக்கும் எனது முழுமையான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பாரிய அளவிலான அர்ப்பணிப்புகளுடனும் பொறுப்புடனும் செயற்பட்ட, சமாதானமான தேர்தலை நடாத்துவதற்கு அனைவரிமும் காணப்பட்ட அர்ப்பனிப்புகளுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

அத்துடன் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பலர் கடந்த நாட்களில் எங்களுக்கு நாட்டிற்கு வருகை தந்திருந்தார்கள், இலங்கை வரலாற்றில் இவ்வளவு சமாதானமாக நடைபெற்ற தேர்தல் இதுவென அவர்களினாலும் காண முடிந்தது.

எங்களுக்கு அவசியமான ஆதரவு வழங்கியமை மற்றும் எங்கள் நாட்டிற்கு வந்தமைக்காக அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

இறுதியாக இத் தேர்தலின் முடிவுகள் வெளியாகும் தினங்களில் தேர்தல் வன்முறைகளின்றி, அரசியல் கட்சி பேதமின்றி, இந்நாட்டின் கௌரவமான, அன்பான மக்கள் மிகவும் சமாதானமான முறையில் தேர்தல் முடிவுகளை அனுபவிக்குமாறு நான் அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.

அதனால் தேர்தல் வன்முறைகள் எவ் முறையிலும் இடம்பெறாமல் செயற்படுவதன் மூலம் தேசிய ரீதியிலும் விசேட கௌரவத்தை பாதுகாக்க முடியும்.

வெற்றி பெற்ற குழு தோல்வியடைந்த குழு தொல்லைகள் கொடுக்காது, மன ரீதியிலும் மிகவும் சமாதான முறையில் தேர்தல் முடிவுகளை கொண்டாடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.



« PREV
NEXT »

No comments