Latest News

August 05, 2015

பெயர்கள்தான் மாறியதே ஒழிய எமது மக்கள் நிலைமைகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை – ஜனா
by admin - 0

ஆட்சிமாறியது காட்சிகள் மாறவில்லை, பேயாட்சி செய்தார் மஹிந்த, நல்லாட்சி என்றார் ரணில் பெயர்கள்தான் மாறியதே ஒழிய எமது மக்கள் நிலைமைகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் ( ஜனா ) தெரிவித்தார்.

நேற்றைய தினம் மாலை  செட்டிபாளையம் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆங்கு தொடர்ந்து உரையாற்றிய கோவிந்தன் கருணாகரம், 
மாற்றம் வேண்டித்தான் வடகிழக்கில் எம்மக்கள் ஜனவரி 8 இல் மௌனப்புரட்சி ஒன்றை ஏற்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றமோ வசந்தமோ உதயமோ எதுவும் எம்மக்கள் வாழ்வில் நிகழவில்லை மாறாக ஏமாற்றமே மிஞ்சியது.

எம்மக்கள் தமது சொந்த இடங்களில் மீளமர்த்தப் படவில்லை தமிழ் மண்ணை ஆக்கிரமித்த இராணுவ ஆதிக்கம் குறையவில்லை காணாமல் போனோர் தொடர்ந்தும் காணாமலே உள்ளனர். 

நடைபெற்ற குருஷேத்திரத்தின் கொடூரத்திற்கு பொறுப்புக் கூறத்தானும் தயாரில்லை எமது மண்ணில் முளைக்கும் எலும்புக் கூடுகளுக்கு இன்னும் முடிவில்லை. எவ்வித குற்றச்சாட்டுமின்றி சிங்கள சிறைகளை நிரப்பிக்கொண்டிருக்கும் எம் தமிழ் இளைஞர்களுக்கு இன்னமும் விடியலில்லை. முறையான விசாரணை நடத்தக்கோரும் சர்வதேச சமூகத்துக்கு ஒத்துழைப்பில்லை. மொத்தத்தில் ஜனவரி 8 இற்கு முன்பிருந்த நிலையில் இம்மியும் மாற்றமற்ற நிலையே இன்னமும். 


ஆட்சி மாற்றங்கள்மூலம் எம்மக்கள் வாழிவில் மீட்சி ஏற்படுமென்று இனியும் நாம் இவர்களது ஆசைவார்த்தைகளுக்கும் இவர்களது அடிவருடிகளின் பசப்புவார்த்தைகளுக்கம் மயங்காது மீண்டும் ஒரு மௌனப்புரட்சியினை எம் தாயகத்தில் ஏற்படுத்துவோம் ஆகஸ்ட்17 இல். அதன் மூலம் பேயாட்சி செய்தவர்களுக்கும் நல்லாட்சி நாயகர்களுக்கும் எம் தமிழர் தாயகத்தின் தெளிவான செய்தியினை எடுத்துரைப்போம். 

அதே போன்று அகஸ்ட்17 இல் எம் தமிழர் தாயகத்திலிருந்து வெளிவரும் மக்கள் ஆணiயானது சர்வதேச சமூகத்திற்கும் எமது மக்களது அபிலாசைகளை ஒருமித்த குரலில் எடுத்துரைப்பதாக எமது ஒற்றுமையை புலப்படுத்துவதாக இருப்பதோடு மட்டுமின்றி தமிழர் தாயகத்தின் சத்தியத்தின் குரலாகவும் அது ஒலிக்கவேண்டும் இதற்காக ஆகஸ்ட்17 தேர்தலில் 

எமது தாயகத்திலிருந்து பேரினவாதிகளுக்கோ அவர்களது அடிவருடிகளுக்கோ ஒரு ஆசனத்தைத் தானும் பெறமுடியாதவாறு எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முழுமையாக வழங்கும் ஆதரவின் மூலம் வடகிழக்கின் 29 பிரதிநிதிகளில் 
20 பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறுவதற்கு வழிசமைப்போம். இதன் மூலம் இத் துரோகக்கும்பல்கள் மீண்டும் எம்மக்கள் முன் தோன்றமுடியாதவாறு துடைத்தெறிவோம். 

ஆட்சியாளர்களிடம் பலமாக பேரம் பேசுவோம் சர்வதேசத்தின் அழுத்தத்தை இலங்கைமீது ஏற்படுத்துவோம் இதனூடாக தீர்வினைப் பெறமுயலுவோம் அதனூடாக உரிமையுடன் தலைநிமிர்ந்து தமிழனென்று வாழுவோம் என்று தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments