Latest News

July 26, 2015

வடக்கு -கிழக்கு மக்கள் உதிரிக்கட்சிகளை அடியோடு உதறித்தள்ள வேண்டும்-இரா. சம்பந்தன்
by Unknown - 0


வடக்கு -கிழக்கு மக்கள் உதிரிக் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து 20 ஆசனங்களை கைப்பற்றி  ஆட்சி அமைப்பதற்கும்  நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கவும்  மக்கள் அனைவரும் ஒன்றிணையுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.  

யாழ். மாவட்ட தேர்தல்  தொகுதிக்கான பரப்புரை கூட்டம்  நேற்று மருதனார்மடத்தில் நடைபெற்றது.  அதில் உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.   அவர் மேலும்  தெரிவிக்கையில், 
   
எமது போராட்டம் ஒரு நீண்ட போராட்டமாக உள்ளது. இந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வரவேண்டிய கட்டத்தை அடைந்துள்ளோம்  என நான் நினைக்கின்றேன். நீண்ட போராட்டம் முடிவுக்கு வருகின்றபோது அதன் முடிவு போராடிய மக்கள்  எதிர்பார்த்த தீர்வை நிரந்தரமான முறையில் நியாயமான, நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.   அவ்வாறாதொரு தீர்ப்பு கிடைக்காவிட்டால் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது என்று கூறமுடியாது. 

10 வருட காலம் மகிந்தவின் கீழ் மிகவும் கொடூரமான ஆட்சி நடைபெற்றது. அவர்கள் அரசியல் தீர்வை கண்டு நாட்டின் பிரச்சினையை தீர்க்க அவர் நினைக்கவில்லை.   அவரது நோக்கம் எமது மக்கள் மீது கஸ்டங்களை குவித்து தமிழ் மக்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவதும் தமிழ் மக்களை பொருளாதார, சமூக , கலாச்சார ரீதியாக  பலவீனப் படுத்துவதும், இராணுவ மயமாக்கல், குடியேற்ற திட்டம்என்பவற்றினால் வடக்கு கிழக்கை குழப்புவதே திட்டம்.   

தை மாதம் 08 மாற்றம் இடம்பெற்றது. மாற்றத்தின் பங்கு தமிழ் மக்கள் தான். அந்த மாற்றத்தின்  காரணமாக ஓரளவிற்கு பெரும்பான்மை மக்களின் சிந்தனை மாற்றம் அடையாமல் இல்லை என்பதும் நாம் அறிந்ததே. எனினும் முழுநம்பிக்கை வைக்க முடியாது.   எமது தேவைகளை நாம் நிறைவேற்ற வேண்டும்.தற்போது தமிழர் பிரச்சினை சர்வதேச மயமாகியுள்ளது. 

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் எம்மால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தீர்மானமான கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக மேலும் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. அதற்கமைய விசாரணையும் நடைபெற்றுள்ளது.  பங்குனி  மாதம்  வெளியிட இருந்த அறிக்கை பிற்போடப்பட்டு செப்ரெம்பருக்கு வெளிவரவுள்ளது. அது நிட்சயமாக வெளிவரும். அதனைத் தொடந்து வேறு பல தீர்மானங்கள் வெளிவர வேண்டும்.    

சர்வதேசம் இன்று இலங்கையில் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளது.  அந்த அளவிற்கு இங்கு வாழும் ஒரு இன மக்கள் அழிக்கப்பட்டுள்ளனர் .இலட்சக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.பட்டினியாலும் மருத்துவம் இன்மையாலும்  தண்ணீர் இன்றியும் இறந்தனர்.

வைத்தியசாலைதாக்குதல், நலன்புரி நிலையங்கள் தாக்குதல் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டன. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டன. மக்களுக்கு வந்த மருந்து,  உணவுகள்  தடை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.   இது குறித்து அன்றும்  நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தோம். 10 இலட்சம் மக்கள்  இந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இந்த நிலை தொடர கூடாது. இழப்புக்கள், துன்ப துயரங்களை எதிர்நோக்கிய மக்களுக்கு உரிய பரிகாரம் செய்யப்பட வேண்டும்.   யுத்தம் முடிந்து 6 வருடம் ஆகியும் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாதுள்ளனர். தற்போது சில தீர்மானங்களின்  அடிப்படையில் வலி.வடக்கு , சம்பூர், கேப்பாப்பிலவு சில இடங்கள் விடுவிக்கப்பட்டன. 

இவை முழுமையாக விடவேண்டும்.மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம் , தொழில் , அத்தியாவசிய தேவை செய்து கொடுக்க வேண்டும்.    முன்னர் மகிந்த இதனைச் செய்யவில்லை. அதற்கு அவர் தடையாக இருந்தார்.வன்னியில் சென்று பல கிராமங்களை பார்வையிட்டு அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் மகிந்தவுடன் பேசினோம். தன்னிடம் காசு இல்லை என்றார்.அதன்பின்னர் இந்திய உதவியை நாடி 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு வழிசெய்தோம். 

அத்துடன் ஒரு குடும்பம் ஒன்றுக்கு ஒரு துவிச்சக்கர வண்டி கொடுங்கள் என்றும் மகிந்தவிடம் கேட்டேன். அதனைக் கூட கொடுக்கவில்லை. அவர் எமக்கு எதையும் செய்ய விரும்பவில்லை.அது தான்  அவரது மனநிலை.   இன்று ஆட்சி மாறியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் பின்னரும்  தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்காது இருக்க முடியாது. இவை நிறைவேற்றப்பட வேண்டும். எமது இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு நாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் எமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எமது மக்கள் ஏற்றுக் கொள்ள கூடிய தமது அபிலாசைகளை நிறைவேற்ற கூடிய அரசியல் தீர்வு வேண்டும்.     

அந்த அரசியல் தீர்வு தான்  எமது பிரச்சினைக்கு தீர்வாக அமையலாம்.இதனையே எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறியுள்ளோம். அரசியல் தீர்வு தொடர்பில் தனிப்பட்ட மக்கள் நாம் எமக்கு ஒரு கலை , கலாச்சாரம் மொழி பண்பாடு உண்டு. நாங்கள்  சரித்திர ரீதியாக வடக்கு - கிழக்கில் வாழ்ந்துள்ளோம்.   ஐ;நா சபையில் அரசியல், குடியியல் ஒப்பந்தம் , பொருளாதார, கலாச்சார ஒப்பந்தத்தின்  அடிப்படையில் இலங்கை கைச்சாத்திட்டு அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளது.  

தமிழ் மக்கள் ஒரு குழாம். இதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு.  இதன்படியே தீர்வு கேட்கின்றோம்.    எமது காணி, பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு,  கல்வி, சுகாதாரம், விவசாயம்  , நீர்ப்பாசனம்,  கடற்றொழில்,  கைத்தொழில், கால்நடை வளர்ப்பு , போக்குவரத்து, புனர்வாழ்வு இவை அனைத்தும் எமது கையில் இருக்க வேண்டும்.  உள்நாட்டிலும் , வெளிநாட்டிலும் அதிகாரம் வேண்டும்.    இதனை நிறைவேற்றினால் தமது இறைமையின் அடிப்படையில் சுயாட்சியை பெறவேண்டும்.  நாம் இந்த நாட்டிற்கு வியாபாரிகளாக வரவில்லை. நேற்று முந்தநாள்  வரவில்லை. சரித்திர ரீதியாக வாழ்ந்தவர்கள் .பெரும்பான்மைக் கட்சி ஒன்றின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதி உச்ச அதிகார பகிர்வு என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒற்றை ஆட்சியின்  கீழ். இது பெரும்பான்மை ஆட்சி தான்.   

நாம் அடிமைகளாக வாழ வேண்டும். இதில் அதிகார பகிர்வு இல்லை. ஒற்றை ஆட்சி நாம் ஒத்துழைக்க மாட்டோம்.ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு காண நாம் சம்மதம் தெரிவிக்கும் போது கூட்டு இறைமை இருக்க வேண்டும்.  இல்லாத தீர்வை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.    இந்தக் கட்சி யாழ்ப்பாணத்திலும் போட்டியிடுகின்றது. ஒற்றை ஆட்சிகேட்டு வரும் இந்தக் கட்சிக்கு வாக்களித்து ஒருவரை கூட நாடாளுமன்ற உறுப்பினராக வர  விடக் கூடாது. இவர்களை உதறித்தள்ள வேண்டும். 

அதேபோல வீணை கட்சியினர். வீணையில் போட்டியிடுகின்றனர்.மகிந்தவுடன் இருக்கும்  போது வலி.வடக்கில்  மக்களது வீடுகளை , பாடசாலை , ஆலயங்களை இடித்த போது  இராணுவம் இடிக்கும் போது ஒட்டிக்கொண்டிருந்தவர் இன்று வந்து யாழில் வாக்கு கேட்கிறார். இது நியாயமா?    இது குறித்து நாங்கள் பேசினோம் மகிந்தவுடன். இதனை வடக்கு முதல்வர் எனக்கு தெரியப்படுத்தினார். 

சென்று பார்க்க அனுமதி தனக்கு வழங்கப்படவில்லை என்றார். உடனடியா ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தினேன். ஆனால்  தெண்டிச்சு நிறுத்துறன் என்று கூறினார்.    ஆனால் பின்னரும் இடித்தளிக்கப்பட்டது. இவ்வாறான நேரத்தில் வீணை மகிந்த பக்கத்தில் இருந்தது. இன்று வந்து வாக்கு கேட்கின்றனர்.  இவர்களை எப்படி ஆதரிக்க முடியும்?  தமிழ் காங்கிரஸ் கட்சியினர் ஒற்றை ஆட்சியை ஏற்றுக் கொண்டவர்கள் .இவர்களுக்கு எவ்வாறு வாக்கிடுவது?      த.தே.கூ அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் அரசியல் அமைப்பு. சர்வதேச அதிகாரிகள் த.தே.கூட்டமைப்பினையே சந்திக்கின்றனர்.  இதனால் சர்வதேசத்திலும் நாம் அங்கீகாரம் பெற்றவர்களாக உள்ளோம்.  எனவே எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை அங்கீகரிக்க வேண்டும்.  அவ்வாறு இருந்தால் நாம் இன்னும் வலுவடையலாம்.      

வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட வேண்டும். அத்துடன் வடக்கு - கிழக்கில் போட்டியிடும் உதிரிக்கட்சிகளை உதறித்தள்ள வேண்டும். இவ்வாறு இடம்பெற்றால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டது. போல ஒரு தீர்வு உருவாகும். இதனை யாரும் தடுக்க முடியாது.    20 ஆசனம் வடக்கு -கிழக்கில் கிடைத்தால் முழுமையான தீர்வு ஏற்படும் என்பது உறுதி. எனவே வாக்கை பிரிக்காது வாக்களிக்க வேண்டும். 90 வீத மக்கள் வாக்களிக்க வேண்டும். சர்வதேச சமூக பார்வை தேர்தலில் உள்ளது. நாங்கள் இரண்டாம் தரப்பிரஜைகளாக வாழ தயார் இல்லை. நல்லிக்கம்,  நிரந்தர சமாதானம்  தீர்வு வரவேண்டும். 

இது மக்களின் கையில் உள்ளது.   எனவே எல்லோரும் வாக்களிக்க வேண்டும். உங்களை நாம் கைவிட மாட்டோம் . எனது கணிப்பின் படி எதிர்வரும் வருட முடிவுக்குள் தீர்வை காணுவோம் என்றும்  அவர் மேலும் தெரிவித்தார்.  
« PREV
NEXT »

No comments