Latest News

July 22, 2015

கருணா ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!
by Unknown - 0

கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது சம்பந்தமாக அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக பேசப்படுகிறது.

அடுத்த சில தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர், கருணா ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறவுள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கருணா, அதில் இருந்து விலகிய பின்னர், அவருக்கு பாதுகாப்பு வழங்கி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி மற்றும் பிரதியமைச்சர் பதவியை வழங்கியமையானது மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு காரணமாக பிரதான விடயங்களில் ஒன்று என சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.

கே.பி. என்ற குமரன் பத்மநாதன், கருணா, பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் போன்றோர் தொடர்பில் கையாண்ட செயற்பாடுகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதது குறித்து மகிந்த அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தது. கருணா மீது பாரிய கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கருணா, அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் நடைபெற்ற காலத்தில் ஆட்கடத்தல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

கருணா குழு தமது பிள்ளைகளை கடத்திச் சென்றதாக கிழக்கு மாகாண பெற்றோரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னணிலையில் சாட்சியமளித்திருந்தனர்.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இம்முறை தேர்தலில் போட்டியிடவோ, தேசிய பட்டியலிலோ கருணாவுக்கு இடமளிக்கப்படவில்லை.

இதனால், ஆத்திரடைந்துள்ள கருணா, ஐக்கிய தேசிய முன்னணியில் இணைய போவதாக கூறப்படுகிறது.

2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக்கட்சி விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டு சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே கருணாவை விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிக்கும் சதித்திட்டங்களை முன்னெடுத்ததாக அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தன.
« PREV
NEXT »

No comments