Latest News

July 24, 2015

ISIS அமைப்பு இஸ்லாத்துக்கு எதிரானது- உலமா சபை
by Unknown - 0

இஸ்லாமிய அரசை வலியுறுத்தி உலகத்தையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பானது இஸ்லாத்துடன் தொடர்புடைய அமைப்பு அல்லவென்றும் அவ்வமைப்பினுடைய பிரகடனங்கள் மற்றும் செயற்பாடுகள், இஸ்லாம் மார்க்கத்துக்கு முரணானது என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை (23) இடம்பெற்ற  செய்தியாளர் மாநாட்டின் போதே அச்சபை மேற்கண்டவாறு கூறியது. இது தொடர்பில் அச்சபை மேலும் கூறியதாவது, தனி மனித செயற்பாடுகளுக்கு முழுச் சமூகமும் பொறுப்பேற்க முடியாது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து, சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் இலங்கையர், சவூதி அரேபியாவுக்கோ மக்காவுக்கோ செல்லவில்லை. 

அவர் பாகிஸ்தான், ஈராக் போன்ற ஏனைய நாடுகளின் ஊடாகச் சென்றே அந்த அமைப்பில் இணைந்துள்ளார். தீவிரவாதத்துக்கு எதிரான மாநாடொன்று புதன்கிழமை (22) ஏற்பாடு செய்யப்பட்டு, பிரகடனமொன்று வெளியிடப்பட்டது. இலங்கையில் உள்ள முக்கிய முஸ்லிம் அமைப்புக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தீவிரவாதத்துக்கு எதிரான தமது முடிவை அறிவித்தன. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பானது, ஈராக், சிரியா போன்ற நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியை பிரகடனப்படுத்தியுள்ளதாக சொல்லிவருகின்றது. இப்பிரகடனமானது இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிரானது. 

இவர்களது இந்த செயற்பாடுகள்  இஸ்லாத்துக்கு முரணானது என்பதை சாதாரண முஸ்லிம்கள்கூட அறிந்துகொள்ளலாம். இந்த அமைப்பை யாரும் பின்பற்றவோ, நம்பவோ கூடாது என நாம் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் திகதியே அறிவித்தோம். அன்பு, கருணை, மனித நேயம், மனித உயிர்களை பாதுகாத்து மதித்தல் போன்ற உயர்ந்த குணங்களை வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம்.  இஸ்லாம் பெயரால் இயங்கும் சகல அமைப்புகளும் இதனை கருத்திற்கொள்ள வேண்டும். 

ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாக செயற்பாடுகளை மேற்கொள்ளும் அமைப்புகளுடன் எவராவது தொடர்புபட்டால் அதனை நாம் கண்டிக்கின்றோம். இவ்வாறான அமைப்புகளுடன் தனிநபர் யாராவது தொடர்புபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம். இது எமது தாய்நாடாகும். இந்த நாட்டின் ஒற்றுமையையும் கீர்த்தியையும் சீர்குலைக்கும் எந்த ஒரு நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை' என உலமா சபை மேலும் கூறியது.
« PREV
NEXT »

No comments