Latest News

July 02, 2015

ஐஏஎஸ் அதிகாரியை "அழகுப்பதுமை" என்றழைத்த ஊடகத்தின் மீது வழக்கு
by Unknown - 0

தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவின் முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் ஐ ஏ எஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால் அவுட்லுக் இதழுக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்திருக்கிறார். அந்த இதழ் அண்மையில் வெளியிட்ட செய்தித்துணுக்கு ஒன்றில் ஸ்மிதா சபர்வாலை eye கண்டி அதாவது கண்ணுக்கு விருந்தாக இருப்பவர் என்று சொல்லி இருந்ததை கண்டித்து இவ்வழக்கு எழுந்துள்ளது. 

அவரை அப்படி வர்ணித்ததோடு மட்டும் விட்டுவிடாமல் பாஷன் ஷோ ஒன்றில் அவர் நவீன உடையோடு ஒய்யாரமாக நடக்க, தெலங்கானா முதல்வர் உள்ளிட்ட அவரது அரசியல் தலைவர்கள் பல்லிளித்தபடி அவரை ஊக்குவிப்பதாக கோட்டோவியம் ஒன்றையும் அந்த பத்திரிக்கை வெளியிட்டிருந்தது.

இது தன்னை கவர்ச்சிக்குரியவளாக சித்தரிக்கும் பெண் எதிர்ப்பு செய்தி என்றும் இது தன்னை மன உளைச்சலுக்குள்ளாக்கியதாகவும் பிபிசியின் இந்திச் சேவைக்கு சுமித்தா சபர்வால் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவுட் லுக் இதழை தொடர்புகொண்டு பிபிசி கேட்டபோது, இவ் வழக்கு தொடர்பான சட்ட அறிவித்தல் எதுவும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று அந்த சஞ்சிகை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அலுவலகக் கூட்டங்களின் போது அழகான சேலைகள் மூலம் தனது நவநாகரிக மோஸ்தரை பறைசாற்றுவதோடு, பார்ப்பவர் கண்களை கொள்ளையிடும்படியாக உலாவருகிறார் என்று அவர் பெயர் குறிப்பிடாமல் அவுட்லுக் அண்மையில் எழுதி இருக்கிறது. அவர் குறித்த விபரங்கள் மிகப்பெரும் மர்மமாகவும், அவர் முதல்வர் அலுவலகத்தில் செய்யும் பணிகள் என்ன என்பது ஒரு புதிர் என்றும் அந்த இதழ் தெரிவித்திருந்தது.

38 வயதான சுமித்தா சபர்வால், அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த ஆடை அலங்கார விழவில் தான் பங்கேற்றது குறித்தே அவுட்லுக் இப்படி எழுதி இருக்கிறது என்று கூறுகிறார். எனக்கு எரிச்சலூட்டி இருப்பது பெண் ஒருவரால் அவரின் அழகைக் காட்டியே முன்னேற முடியும் என்பதாக அவர்கள் எழுதி இருபதுதான் என்று ஸ்மிதா கோபப்பட்டிருக்கிறார். இது வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களை அவமானப்படுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.

அவுட் லுக் எல்லை மீறிய பாலியல் பார்வையோடு எழுதியிருப்பது தன்னை வெகுவாக பாதிப்பதாக கூறியிருக்கும் ஸ்மிதா ஷபர்வால், இதற்காக அந்த இதழ் மன்னிப்பு கோரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

"எனது 14 ஆண்டுகால அரச பணியில் என்னை ஒரு பெண் என்பதாலோ அல்லது அழகாய் இருக்கிறேன் என்பதற்காகவோ இதைப்போல எப்போதும் யாரும் வேற்றுமைப்படுத்தியதில்லை. சிறுமையாக நடத்தியதும் இல்லை", என்கிறார் ஸ்மிதா.

"முதலமைச்சர் அலுவலகத்தின் முதலாவது பெண் பணியாளராக நான் பணியமர்த்தப்பட்டிருக்கும் இந்த சமயத்தில்தான் இப்படியான தாக்குதலை நான் எதிர் கொள்கிறேன். நான் எல்லாவிதமான தடைகளையும் உடைத்தபடி மேலே எழுவதை நிச்சயாமாக சிலரால் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனது பணிகளை பொறமை காரணமாக சிலர் வேரறுக்க நினைக்கிறார்கள். அதைப்போலவே பொறுப்பற்ற வகையில் இந்த இதழும் செயல்பட்டிருக்கிறது," என்கிறார் ஸ்மிதா சபர்வால்.

சுமித்தா சபர்வாலின் இந்த கோபத்தை சில சமூக வலைத்த பயனாளர்கள் ஆதரித்துள்ளனர். அவர்களில் பலர் அவுட்லுக் இதழை இதற்காக விமர்சித்திருக்கிறார்கள்.
« PREV
NEXT »

No comments