Latest News

July 31, 2015

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளை பிரதிநிதிகள் ஏற்கக்கூடாது – சி.வி
by Unknown - 0

அரசியல் ரீதியான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் எக்காலத்திலும் அமைச்சுப் பதவிகளை தமிழ்ப் பிரதிநிதிகள் ஏற்கக்கூடாது என்பதே தமது நிலைப்பாடாகும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டினை அறிவிக்கும் வகையில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் வட மாகாண முதலமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் காற்றோடு பறந்துவிடும் என்பதுடன், அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கும் தமிழ்ப் பிரதிநிதிகள் சுதந்திரம் இழந்து மக்களின் உரித்துகளையும், எதிர்ப்பார்ப்புகளையும் கைவிட நேரிடும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

வட மாகாண முதலமைச்சராக தம்மை கூட்டமைப்பினர் தேர்ந்தெடுத்திருந்த போதிலும், அக்கட்சி வேட்பாளர்களுக்காக பக்கச் சார்பான முறையில் ஆதரித்துப் பேசுவது தமக்கு அழகல்ல என சுட்டிக்காட்டியுள்ள விக்னேஸ்வரன், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளோடு சேர்ந்து அந்நியோன்யமாக செயற்படுவது தமக்கு பிரச்சினையல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் யாராக இருப்பினும் கட்சிகளின் நலனைவிட மக்களின் நலன்களே முதன்மை பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வட மாகாண சபை தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் போருக்குப் பின்னரான சூழலில் புனர்நிர்மானம், மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்ற முக்கிய சவால்களை அனைவரும் எதிர்நோக்கியுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமதறிக்கையில் கூறியுள்ளார்.

இதுதவிர அரசியல் ரீதியாக நிரந்தர தீர்வும், போரினால் பாதிக்கப்பட்டோருக்கு நீதிகிடைப்பதும் இன்னும் தாமதமாகிக் கொண்டேயிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில் தேர்தல் முடிவடைந்தவுடன் முக்கிய சவாலான அரசியல் தீர்வுகளுக்காக ஒருமனதுடன் ஒத்துழைக்கக்கூடிய பிரதிநிதிகளையே மக்கள் தேர்தந்தெடுக்க வேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சியை இனங் கண்டு ஜனநாயக ரீதியாக சகலரும் சேர்ந்து அந்த சக்திகளுக்கு துணையாக நிற்பதற்கு எதிர்வரும் தேர்தலானது களம் அமைத்துக்கொடுக்கும் என்று தாம் நம்புவதாகவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments