Latest News

July 28, 2015

விமானநிலைய கைதுகள் இன்னும் தொடர்கிறது- பா.அரியநேத்திரன்
by Unknown - 0

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி தமது மக்களின் விடுதலைக்காக போராடி இன்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள முன்னாள் போராளிகளை கைது செய்யும் படலம் இன்றும் தொடர்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து முன்னாள் போராளியான தங்கராசா குணநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதான இவரது சொந்த இடம் வந்தாறுமூலை தற்போது மணம் முடித்து சந்திவெளியில் வாழும் இவர் தமது குடும்ப சூழ்நிலை காரணமாக கட்டாரில் தொழில்புரிந்து வருகின்றார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டு அரசாங்கங்களை பொறுத்தவரையில் எந்த அரசாங்கம் வந்தாலும் தமிழ் மக்களுக்கான எந்த நல்ல விடயங்களையும் செய்த வரலாறே இல்லை. தற்போது தேர்தல் காலம் என்றாலும் சரி தேர்தல் காலத்திற்கு முன்பாக இருந்தாலும் சரி தமிழர்களது கைதுகள் என்பது தொடர்கதையாகவே தொடர்ந்து கொண்டு செல்கின்றது.

தங்கராசா குணநாயகம் என்பவர் மணம் முடித்து ஒரு குழந்தையின் தந்தை என்பதுடன் இவர் வெளிநாடு சென்று, விடுமுறைக்காக 50 நாட்கள் வீட்டில் இருந்து விட்டு நேற்று இரவு கொழும்பு சர்வதேச விமானநிலையத்தினூடாக கட்டாருக்கு செல்ல இருந்த வேளை, இரவு 8.00 மணிக்கு அவரை கைது செய்துள்ளார்கள். இவரது கைதுடன் 20வது நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இவர்களால் கைதுசெயயப்பட்டவர்களில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் அவர்களை விடுதலை செய்வதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இதுவரை எந்தப்பயனும் கிடைக்கவில்லை எனபதுதான் இந்த பேரினவாத அரசாங்கங்களின் செயற்பாடாக இருந்து வருகின்றது.

இந்த நாட்டிலே இருந்த ஆயுத போராட்டத்தினை முற்றுகைக்குள் கொண்டு வந்து விட்டதாக கூறிய மகிந்த அந்த போராட்டத்தில் தமிழ் மக்களின் விடிவிற்காக போராடி பின்னர் அந்த போராட்டங்களில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுவரும் எவரையும் இந்த பேரினவாத அரசாங்கங்கள் விட்டு வைத்ததாக தெரியவில்லை.

ஆகவே தமிழ் மக்கள் அனைவரும் எதிர்வரும் காலத்தில் எமது உரிமைகளை தட்டிக்கேட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்த வேண்டியது அனைவரதும் கடமையும் பொறுப்புமாகும் எனவும் கூறினார்.
« PREV
NEXT »

No comments