Latest News

July 28, 2015

வட்டுக்கோட்டை பிரகடனத்துக்கு நிகர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் - டலஸ்
by Unknown - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனமானது 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு நிகரானது என்று சுட்டிக்காட்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளருமான டலஸ் அழகப்பெரும, இது நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன்,பிரிவினைவாதத்தைத் தூண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.    

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   அவர் மேலும் குறிப்பிடுகையில்,   தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனநாயக ரீதியில் செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சுயரூபத்தை தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் வெளிக்காட்டியுள்ளது.    

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது.1976 வட்டுக்கோட்டை பிரகடனத்துக்கு நிகரானது இவர்களது தேர்தல் விஞ்ஞாபனம்.    தமிழ்மொழியைப் பிரதானமாகக் கொண்டு வடக்கு, கிழக்கை இணைத்து சுயாட்சியை இவர்கள் கோருகின்றனர். அதுமட்டுமல்லாது, போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணையையும் வரவேற்றுள்ளனர்.      பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்குக்கு வெளியே கொழும்பு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

எனினும், அவர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கவில்லை என்பது ஏன் என்று தற்போது தான் தெரிகின்றது.    ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு அடிப்படையில் நெருக்கமான உறவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேணிவருகின்றது. 

இதற்கமையவே தற்போது தேர்தல் விஞ்ஞாபனத்தை அவர்கள் தயாரித்துள்ளார்கள். இவை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஹெல உறுமய என்பன மெளனிகளாக இருக்காது நாட்டு மக்களுக்குத் தமது நிலைப்பாடு தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவேண்டும். 

சர்வதேச நாடுகளின் தலையீட்டினாலேயே தேர்தல் நடத்தப்படுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செப்டெம்பரில் கூடவுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்குத் தண்டனைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்ட தலைமைத்துவத்தைக் காட்டிக்கொடுக்கக் கூடாது.    மஹிந்தவைப் பாதுகாப்பதற்காக மக்கள் எதிர்வரும் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க வேண்டும். தேர்தல் சட்டங்களை நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியே அதிகம் மீறுகின்றது.    பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொள்வதுடன் எமது சுவரொட்டிகளை மாத்திரமே அகற்றுகின்றனர். எது எவ்வாறாயினும், எமது தேர்தல் பரப்புரைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். 
« PREV
NEXT »

No comments