Latest News

July 02, 2015

வேட்பாளர் தேர்வு- ததேகூ கட்சிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு
by Unknown - 0

இலங்கையின் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வரும் ஜூலை ஆறாம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்திருக்கும் பின்னணியில் அரசியல் கட்சிகள் தமக்குரிய வேட்பாளர்களைத் தெரிவு செய்வது உட்பட தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன.

இந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவருமான அன்டனி ஜெகநாதன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான குழு ஒன்றை அமைத்து, தகுதியானர்களிடமிருந்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்களைப் பெற்று சரியானவர்களை வேட்பாளர்களாகத் தெரிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல விடயங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.

கட்சித் தலைவர்கள் தவிர்த்த ஏனையோர் மூன்று தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருந்தால், நான்காவது தடவை அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என்றும் அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் முக்கியமாகத் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த தேர்தலின்போது அமைக்கப்பட்ட தெரிவுக்குழுவில் அந்தத் தேர்தலில் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த சிவகச்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்துள்ளார்கள். இத்தகைய நடவடிக்கைகள் இம்முறை இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவருடைய மற்றுமொரு முக்கிய கோரிக்கையாக அந்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்டனி ஜெகநாதனின் இந்தக் கோரிக்கைகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கூடி அந்தந்தக் கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து ஆராய்ந்திருக்கின்றர்கள். இதில் இறுதி முடிவு எட்டப்பட்டதும், அந்தந்தக் கட்சிகள் தமக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாகத் தமக்குரிய வேட்பாளர்களைத் தெரிவு செய்வதே நடைமுறையாகும் என்று தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால், பொதுவான குழுவொன்றை அமைத்து, வேட்பளார்களைத் தெரிவு செய்யலாம். ஆனால், கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி விருப்பமில்லாத போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது. இந்த நிலையில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களுக்கான வேட்பாளர்களை அந்தந்தக் கட்சிகளே தெரிவு செய்ய வேண்டும். அந்த விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற நிலையில் தலையீடு செய்ய முடியாது என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

ஜூலை ஆறாம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டியிருப்பதனால் கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவதில் இறுதி முடிவை எட்டுவதிலும், அதற்குப் பின்னர் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தருணத்தில் இத்தகைய விவாதங்களை முன்னெடுத்திருப்பது பொருத்தமற்றது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments