Latest News

July 21, 2015

அரும்புகளின் 22, 23 வது இலவசக் கல்வியகங்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவில் நடைபெறுகின்றன
by admin - 0

அரும்புகளின் 22, 23 வது இலவசக் கல்வியகங்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவில் நடைபெறுகின்றன...

2009 யுத்தத்தின் போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் மிகவும் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகின. அதில் அனைத்து பாடசாலைகளும் முற்றாக அழிக்கப்பட்டன. தற்போது மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு வரும் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிவர்த்தி செய்யப்படாமல் உள்ளன. 

இங்குள்ள மாணவர்கள் யுத்தத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு இன்னும் பல பத்தாண்டுகள் செல்லலாம் என பன்னாட்டு உளவியல் நிபுணர்கள் அறிக்கையிட்டுள்ள நிலையில் அங்குள்ள மாணவர்களின் இந்நிலை மாற்றிட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் கல்வி வளர்ச்சித் திட்டப்பிரிவான  “அரும்புகள்” தன்னால் இயன்ற பங்களிப்பினை புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளின் உதவிகளுடன் தொடர்ந்து வழங்கி வருகின்றது. 

ஆசிரியர்களின் பற்றாக்குறை உள்ளமையினால்  பாடசாலைகளில் பாட விதானங்கள் முழுமைபெற முடிவதில்லை என்ற கவலையும், ஏக்கமும் மாணவர்களிடத்தில் காணப்படுகின்றன. இதனை கருத்திற்கொண்டே “அரும்புகள்” மாலை நேர வகுப்புகளை நடாத்தி மாணவர்களின் கல்வி தேவையை ஓரளவு பூர்த்தி செய்து வருகின்றது. இன்னும் “அரும்புகளின்” சேவை அதிகம் விரும்பப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒவ்வொரு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“அரும்புகளின்” 22 வது நிலையமாக கிளிநொச்சி மாவட்டம் கண்ணகிபுரம் பாடசாலையில் 32 மாணவர்களுக்கான வகுப்புக்கள் அந்த பாடசாலை அதிபர் தலைமையில்  ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

23 வது நிலையமாக முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் 45  மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பித்துள்ளது “அரும்புகள்”, பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற  ஆரம்ப நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் திரு. ரவிகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

அரும்புகள் சார்பாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
« PREV
NEXT »

No comments