Latest News

June 22, 2015

அய்யனார் கோயிலில் தலைவர் பிரபாகரன், வீரப்பனுக்கு சிலை: விழுப்புரம் அருகே பரபரப்பு
by admin - 0

விழுப்புரம் அருகே அய்யனாரப்பன் கோயிலில் வீரன் சிலை அருகே தமிழீழ தேசியதலைவர் பிரபாகரன் மற்றும் வீரப்பன் ஆகியோரின் சிலைகள் காவல் தெய்வங்கள் போல் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் போலீஸாரின் நிர்பந்தத்தை தொடர்ந்து அந்த சிலையில் அவர்களின் உருவம்போல் தெரியாமல் இருக்க சில மாறுதல்கள் செய்யப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி சடையாண்டிகுப்பம். 

இந்த கிராமத்தில் ஊருக்கு வெளியே அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இங்கு கடந்த 2010-ம் ஆண்டு வீரனுக்கு 25 அடி உயர சிலை எழுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 25-3-2010-ல் வீரன் சிலைக்கு வலது புறத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் சிலையும், வலது புறத்தில் மாவீரன் எல்லை காத்த வீரப்பன் சிலையும் நிறுவி அப்பகுதி மக்கள் கோயிலில் வழிபாடு நடத்தினர். 

அப்போதைய பாமகவில் இருந்த ஒருவர் இச் சிலைகளை அக் கோயிலில் வைத்ததாக கூறப்படுகிறது.
அக் கோயிலில் பிரபாகரன், மற்றும் வீரப்பனுக்கு சிலைகள் இருக்கும் விவகாரம் கண்டமங்கலம் காவல்துறையினருக்கு தற்போதுதான் தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பிரபாகரன் சிலையின் தொப்பியில் விடுதலைப் புலிகளின் சின்னமும், துப்பாக்கியும் கையில் இருந்தன. 

மறுபுறத்தில் கட்டை மீசையுடன் வீரப்பன் சிலையும் இருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் அச் சிலைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடம் வலியுறுத்தினர். ஆனால் பொதுமக்கள் தாங்கள் வழிபாடு நடத்தும் கோயிலில் இருந்து சிலைகளை எடுக்க இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இப் பேச்சு வார்த்தையின் முடிவில் இச் சிலைகளின் உருவங்கள் அவர்கள் போல் தெரியாமல் இருக்க பிரபாகரன் தொப்பியில் உள்ள விடுதலை புலிகள் சின்னம் அகற்றப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து வீரப்பன் கட்டை மீசையும் மாற்றி அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கண்டமங்கலம் போலீஸார் அங்கிருந்து சென்றனர்.

இது குறித்து கண்டமங்கலம் போலீஸாரிடம் கேட்டபோது அப்போது பாமகவில் இருந்து ஒருவரால் இச் சிலை அமைக்கப்பட்டது. தற்போது அவர் அக் கட்சியில் இருந்து விலகி ஆளும் கட்சியில் சேர்ந்துவிட்டார். 

அவரிடம் இச் சிலை இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை கூறி அவர் மூலமாகவே அக் கிராமத்தினரிடம் பேசி அவர்கள் சம்மதத்துடன் சிலை முழுவதும் அகற்றாமல் உருவத்தை மாற்றி அமைத்துள்ளனர் என்றார். (மாறுதல் செய்யப்பட்ட சிலைகள் படத்தில் உள்ளன)
« PREV
NEXT »

No comments