Latest News

May 03, 2015

வழக்கு முடியும் வரை எந்தவொரு கட்சியும் பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!
by Unknown - 0

கடந்த நான்கு வருடங்களாக எந்தவொரு புதிய அரசியல் கட்சியும் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்ய முடியாதுள்ளதாகவும், உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வழக்கு முடியும் வரையில் இந்நிலைமை நீடிக்கும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணையாளரினால் கட்சிகளுக்கான பதிவுக்கு விண்ணப்பம் கோரப்படும் வரையில் எந்தவொரு கட்சியும் பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தேர்தல் தொடர்பாக உள்ள வழக்கு முடிவும் வரையில் எந்தவொரு கட்சியும் பதிவு செய்யக் கூடாது என தேர்தல் சட்டம் தெரிவிக்கின்றது.

கடந்த 2011 இற்குப் பின்னர் நான்கு வருடங்களாக தேர்தல்கள் திணைக்களத்தில் எந்தவொரு கட்சியும் பதிவு செய்யப்பட அனுமதிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. ஒரு தேர்தல் முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னரே கட்சிப் பதிவுக்கு விண்ணப்பம் கோர முடியும்.

வட மாகாண முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல், வழக்கின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இவற்றுக்கான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களை நடாத்தி முடியும் வரையில் எந்தவொரு கட்சிப் பதிவும் இடம்பெற மாட்டாது.

நாடு முழுவதிலும் 337 உள்ளுராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் 335 இற்கு தேர்தல்கள் நடைபெற்றன. இன்னும் இரண்டுக்கு தேர்தல் இதுவரை நடைபெறவில்லை.

பொதுபல சேனா கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னர் அரசியல் கட்சிப் பதிவு தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்துக்கு வந்து பேசியுள்ளது. இவ்வமைப்புக்கும் இந்த சட்டத்தையே அதிகாரிகள் தெளிவுபடுத்தியிருப்பார்கள் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் டெய்லி சிலோனிடம் மேலும் தெரிவித்தார்.

பொதுபல சேனா அரசியல் கட்சி ஆரம்பிக்கச் சென்று தேர்தல் திணைக்களத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து பிரதித் தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார். 
« PREV
NEXT »

No comments