Latest News

May 22, 2015

ராஜ்பவனில் ஜெ.. முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்!
by admin - 0

சென்னை: அதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயலலிதா இன்று பிற்பகல் ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் தனது அமைச்சரவையின் பட்டியலையும் அவர் ஆளுநரிடம் ஒப்படைத்தார். முன்னதாக, இன்று காலை நடந்த அதிமுக எம்.எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். 

இதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஓ.பன்னீர் செல்வம். இதைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்க வருமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆளுநரைச் சந்திக்கக் கிளம்பினார் ஜெயலலிதா. 

போயஸ் தோட்ட வீட்டிலிருந்து ராஜ்பவன் வரை வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கில் குவிந்து விட்ட அதிமுக தொண்டர்களால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போனது, போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் வீட்டை விட்டு இன்று வெளியே வந்தார். அவர் செல்லும் பாதை நெடுங்கிலும் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கூடி நின்று ஆட்டம் பாட்டத்துடன் பூ தூவி வரவேற்றனர். பஸ்கள் ரூட் மாற்றம், கடும் வெயில் உள்ளிட்டவை காரணமாக மக்கள் பெரும் சிரமத்துக்கும், துயரத்துக்கும் உள்ளானார்கள். இப்படியாக ஜெயலலிதா ராஜ்பவன் வந்து சேர்ந்தார். 

அங்கு ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்தார். அவரிடம் முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தன்னை சட்டசபை கட்சித் தலைவராக அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்தது தொடர்பான தீர்மான நகலையும் ஆளுநரிடம் வழங்கினார். அமைச்சரவைப் பட்டியலையும் அவர் ஆளுநரிடம் கொடுத்தார்.. இதையடுத்து ஜெயலலிதாவை ஆட்சியமைக்குமாறு ஆளுநரும் முறைப்படி அழைப்பு விடுத்தார்.


« PREV
NEXT »

No comments