Latest News

May 22, 2015

5வது முறையாக நாளை தமிழக முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதா
by Unknown - 0

தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நாளை பதவியேற்க உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. 

ஆனால் இந்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஜெயலலிதா சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இதன் பின்னர் ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் ரோசையா அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக நாளை பிற்பகல் ஜெயலலிதா பதவியேற்க உள்ளார்.

ஜெயலலிதா இதுவரை கடந்து வந்த பாதை... 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்பு அண்ணா தி.மு.க. சார்பில் 1991 முதல் 1996 வரை முதல் முறையாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்தார். 

1996 ஆம் ஆண்டு தேர்தலில் அண்ணா திமுக தோல்வி அடைந்தது. தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது ஏராளமான வழக்குகள் ஜெயலலிதா மீது தொடரப்பட்டன.

2001 ஆண்டு சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. வெற்றி பெற்றது. 2001 மே முதல் செப்டம்பர் வரை முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தார். 

டான்சி நில முறைகேடு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் முதல்வர் பதவியை இழந்தார். 

2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். 

2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் டான்சி வழக்கில் விடுதலை பெற்றதால் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்றார்.

2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. தோல்வி அடைந்தது. 

2011 ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் அண்ணா தி.மு.க. வெற்றி பெற 4வது முறையாக ஜெயலலிதா முதல்வரானார். 

2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்தது. இதனால் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார். 

2015ஆம் ஆண்டு மே 11-ந் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. 

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக நாளை பொறுப்பேற்க இருக்கிறார் ஜெயலலிதா. 
« PREV
NEXT »

No comments