Latest News

May 04, 2015

ஜெயலலிதா மனுவின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்யும் ஆச்சாரியா!
by Unknown - 0

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கின் அடித்தளத்தையே ஆட்டம் காணச்செய்துள்ளது ஆச்சாரியா சமர்ப்பித்த வாதம். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் பி.வி.ஆச்சாரியா. நியமிக்கப்பட்ட ஒரே நாளுக்குள், 18 பக்க கர்நாடக தரப்பு வாதத்தையும், ஹைகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார் ஆச்சாரியா. அந்த வாதத்தின் முக்கிய கருப்பொருள்தான், தற்போது ஜெயலலிதா தரப்பை ஆட்டம் காண செய்துள்ளது.

எதிர்பாராத நேரத்தில் என்ட்ரி ஆனவர் ஆச்சாரியா. பவானிசிங் நியமனம் செல்லுமா செல்லாதா என்பதில்தான் அனைவரின் பார்வையும் இருந்த சமயத்தில், திடீரென விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் ஆச்சாரியா. கர்நாடக அரசின் இந்த மூவ், யாரும் எதிர்பார்க்காதது என்றாலும், யதார்த்தமானது.  

சுமார் ஏழு ஆண்டு காலம், ஜெ., வழக்கில் அரசு வக்கீலாக ஆஜரான ஆச்சாரியாவை விட்டால், வேறு யாரால் ஒரே நாளில் இந்த பதில் மனுவை தாக்கல் செய்ய முடியும் என்ற கர்நாடக அரசின் யோசனைதான், அவரது நியமனத்துக்கு காரணம்.

அன்பழகன் தரப்பை, கோர்ட் பக்கம் வர வேண்டாம் என்று விரட்டிய ஹைகோர்ட்டிடமே, அன்பழகன் தரப்பு வாதத்தை சமர்ப்பிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. இது அன்பழகன் தரப்புக்கு கிடைத்த முதல் வெற்றி என்றால், ஆச்சாரியாவின் வாதம், 2வது வெற்றி.

ஆனால், ஆச்சாரியாவின் நியமனம் அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை. ஏனெனில், கர்நாடக பாஜக அரசின்போது, மாநில அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தவவர் ஆச்சாரியா என்பதால், தற்போதைய காங்கிரஸ் அரசில் முக்கிமான ஒரு வழக்கின் அரசு வக்கீலாக அவரை நியமிக்க ஆளும் தரப்பு முதலில் தயங்கியுள்ளது. ஆனால், ஒரே நாளி்ல் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டிய நிர்பந்தம் இருந்ததால், கடைசியாக ஆச்சாரியாதான் ஒரே நபர் என்ற முடிவுக்கு அரசு வந்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆச்சாரியாவும், தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வந்த வாய்ப்பை நழுவ விடாமல், பயன்படுத்திக்கொள்ளவும் ஆச்சாரியா முடிவு செய்தார். எனவே, கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்றார். உடனடியாக பதில் மனுவை தயாரிக்க கர்நாடக அரசு கேட்டுக்கொண்டது.

அதிகபட்சமாக 50 பக்கங்கள் வரை பதில் மனுவை தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தாலும்கூட, சுருக்கமாக சில விஷயங்களைச் சொன்னால் போதும் என்று சொல்லி ஆச்சார்யா டிக்டேட் செய்துள்ளார். அவரது வாதம் மொத்தமே 18 பக்கங்களுக்குள்தான் வந்தது.

அதில் மிக முக்கியமாக அவர் சொன்ன விஷயம், ‘இந்த மேல்முறையீட்டு மனுவே சட்டப்பூர்வமானது அல்ல' என்பதுதான். ‘இந்த வழக்கை நடத்தியது கர்நாடக அரசு. அவர்கள்தான் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞரை நியமித்து வாதங்களை வைத்தார்கள். வழக்கின் தீர்ப்பு வந்து, மேல்முறையீட்டுக்கு இந்த வழக்கு போனது என்றால், எதிர் மனுதாரராகக் கர்நாடக அரசைச் சேர்த்திருக்க வேண்டும், அவர்களது பதிலை வாங்கி இருக்க வேண்டும். அப்படி கர்நாடக அரசுக்குத் தெரியாமல் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து விசாரணையை முடித்திருக்கிறார்கள். எனவே இந்த மேல்முறையீட்டு மனுவே செல்லாது' என்று சொல்லியிருக்கிறார் ஆச்சார்யா!

மேல்முறையீட்டு மனுவே செல்லாது என்று ஆச்சார்யா சொல்வதை நீதிபதி குமாரசாமி பரிசீலனை செய்ய ஆரம்பித்தால் என்ன ஆவது என்று சட்ட வல்லுநர்கள் மத்தியில் ஒரு விவாதம் நடக்க ஆரம்பித்துள்ளது. ஒருவேளை, ஆச்சார்யா மனுவுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, குழப்பங்கள் இன்னமும் தீராமல்தான் உள்ளது.

இந்நிலையில்தான், வரும் 12ம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நீதிபதி குமாரசாமி உள்ளார். ஆச்சாரியா வைத்த அந்த செக், வழக்கின் அடித்தளத்தை ஆட்டிப்பார்த்துள்ளது.

« PREV
NEXT »

No comments