Latest News

April 24, 2015

லண்டனில் நடந்த ஏலத்தில் திப்பு சுல்தானின் 30 போர் கருவிகள் ரூ.57.29 கோடிக்கு விற்பனை
by admin - 0



லண்டனில் நடந்த ஏலத்தில் திப்பு சுல்தானின் 30 போர் கருவிகள் ரூ.57.29 கோடிக்கு விற்பனை ஆனது. இதில் வைரம் பதிக்கப்பட்ட போர் வாள் மட்டும் ரூ.20.57 கோடிக்கு விற்கப்பட்டது.

திப்பு சுல்தானின் போர் கருவிகள்

ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் திப்பு சுல்தான். ‘வாழ்நாள் முழுவதும் மந்தையில் ஒரு ஆடாக வாழ்வதை விட ஒரு புலியாக வாழ்ந்து சாவதே மேல்‘ என வீர முழக்கமிட்டவர் திப்பு சுல்தான். இதனால் ‘மைசூரு புலி’ என்று அழைக்கப்பட்ட இவர் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த சமயத்தில் பல நவீன ஆயுதங்களை பயன்படுத்தினார். 

இந்த நிலையில், திப்பு சுல்தான் பயன்படுத்திய வைரங்கள் பதிக்கப்பட்ட புலித்தலை கைப்பிடி கொண்ட போர் வாள், கிரீடம், நவீன முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், அம்புகள் வைக்க பயன்படுத்திய உறைகள், உலோகத்தால் ஆன பீரங்கிகள் என கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள திப்பு சுல்தானின் 30 போர் கருவிகள் லண்டனில் ஏலம் விடப்பட்டன. லண்டனில் உள்ள பிரபல ஏல நிறுவனமான ‘போன்ஹாம்ஸ்’ என்ற நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.

ரூ.57.29 கோடிக்கு விற்பனை

இதில் வைரங்கள் பதிக்கப்பட்ட புலித்தலை கைப்பிடி கொண்ட போர் வாள் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.76 லட்சம் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக அதாவது ரூ.20 கோடியே 57 லட்சத்துக்கு விற்பனை ஆனது. அதேபோல, உலோகத்தால் ஆன 3 சிறிய வகை பீரங்கிகள் ரூ.13 கோடியே 62 லட்சத்திற்கும், திப்பு சுல்தான் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வந்த இரட்டை குழல் துப்பாக்கி ரூ.6 கோடியே 90 லட்சத்துக்கும் விலை போனது. இதர போர் கருவிகள் ரூ.16 கோடியே 20 லட்சத்துக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. மொத்தம் 30 போர் கருவிகள் ரூ.57.29 கோடிக்கு ஏலம் போனது. 

இதற்கு முன்பு திப்பு சுல்தான் சிம்மாசனத்தில் இருந்த கற்கள் பதிக்கப்பட்ட 2 புலித்தலைகளில் ஒன்று ரூ.2 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், மற்றொன்று ரூ.2 கோடியே 70 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் ஏலம் போனது. மேலும் கடந்த 2004-ம் ஆண்டு திப்பு சுல்தானின் போர் வாள் ஒன்றை தொழில் அதிபர் விஜய் மல்லையா ரூ.1லு கோடிக்கு ஏலம் எடுத்து கர்நாடகத்துக்கு மீட்டுக்கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. 
« PREV
NEXT »

No comments