Latest News

March 29, 2015

ஐ.நா.மனித உரிமை கூட்டத் தொடருக்கு முன் பொதுத்தேர்தல்!
by Unknown - 0


ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் கட்டாயம் பொதுத்தேர்தலை நடத்துவது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விகிதாசார மற்றும் தொகுதிவாரி முறையில் இந்தப் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதுடன் தொகுதிகளை நிர்ணயம் செய்யும் பணிகளைத் துரிதமாக முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது. பொதுத்தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.  

உள்ளூராட்சி சபைகளுக்கான தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டு அது தொடர்பான அறிக்கை கடந்த அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டபோதிலும் அது செயற்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும் பொதுத்தேர்தலுக்கான தொகுதிகளை நிர்ணயம் செய்வது தனியாக மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கு சுமார் இரண்டு மாத காலம் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தமது தொகுதிகளின் மறுசீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டிய தேவை குறித்தும் ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  

எனினும் செப்ரெம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்னதாகப் பொதுத்தேர்தலை நடத்திவிட்டு அந்த மாநாட்டில் கலந்துகொள்வது அத்தியாவசியமானது எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறான நிலைமையில் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க வாய்ப்பில்லை எனவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »