Latest News

March 25, 2015

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் EPDPயின் ஊடக பேச்சாளர் பசுபதி சீவரத்தினத்தின் சகோதரர்
by admin - 0

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய குடிநீர் தாங்கியில் கடந்த 18ம் திகதி விஷம் கலக்கப்பட்டது. விஷம் கலக்கப்பட்ட குடிநீரை பருகிய 27 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். விஷம் கலந்தமை தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் பணிப்பின் பேரில் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான விசேட குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் துரித கெதியில் மேற்கொள்ளபட்டு வந்தன. 

அந்த விசாரணைகளில் பிரகாரம் அப் பாடசாலையின் இரவு நேர காவலாளிகள் இருவரை கடந்த திங்கள் கிழமை பொலிசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் விசாரணைகளுக்கு அழைக்கும் போதெல்லாம் பொலிஸ் நிலையம் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் பொலிஸ் பிணையில் விடுவித்தனர். 

இந் நிலையில் செவ்வாய் கிழமை தாம் பிரதான சந்தேக நபர் ஒருவரை மையிலங்காட்டு பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாகவும், அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றிய தகவல்களை அவரிடம் இருந்து பெற்று கொள்ளலாம் என தாம் எதிர்பார்ப்பதாகவும் சுன்னாகம் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் ஈ.பி.டி.பி.கட்சியின் ஊடக பேச்சாளரான பசுபதி சீவரத்தினத்தின் சகோதரர் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விஷம் கலக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்று ஓரிரு நாளில் பசுபதி சீவரத்தினத்தின் மக்கள் செல்வாக்கை கண்டு பொறாமை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகான சபை உறுப்பினர் ஒருவரே விஷத்தினை கலந்ததாக ஈ.பி.டி.பி. கட்சியை சேர்ந்தவர்களும் அக் கட்சி சார்பான சில இணையத்தளங்களும் திட்டமிட்ட ரீதியில் வதந்திகளையும் பொய் செய்திகளையும் பரப்பியதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு உள்ளனர்.

அத்துடன் அப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் எனவும் அவர்களின் கல்வி வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்ட மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களே விஷத்தினை கலந்ததாகவும் செய்திகளையும் வதந்திகளையும் பரப்பி மக்களிடையே சாதிப்பிரச்சனையை உருவாக்க முயற்சித்ததாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

அவ்வாறான செய்திகளாலும் வதந்திகளாலும் பொலிசாரின் விசாரணையை திசை திருப்ப ஈ.பி.டி.பி.யினர் எடுத்த முயற்சிகள் தற்போது வீண் போயுள்ளதாகவும் அவர்கள் தமது அரசியல் சுயலாபத்திற்காகவே விஷத்தினை கலந்தமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் பிரதேச செய்தியாளரிடம்  தெரிவித்துள்ளனர். 

அத்துடன் பொலிசார் கைது செய்துள்ள பிரதான சந்தேக நபரிடம் உரிய முறையில் விசாரணையை மேற்கொண்டு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி மிக கடுமையான தண்டனையை வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments