Latest News

February 22, 2015

புலம்பெயர்ந்தவர்கள் மீது பாதுகாப்பு தரப்பின் கெடுபிடிகள்! மரணச் சடங்குகளில் கூட பங்கேற்க முடியாத அவலம்
by admin - 0

நாட்டுக்குள் வருகை தரும் புலம்பெயர்ந்த உறவுகள் மீது பாதுகாப்பு தரப்பின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமுள்ளதாக தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமது உறவினர்களின் மரணச் சடங்குகளில் கூட நிம்மதியாக பங்கேற்க முடியாது இராணுவப் புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்து நெருக்கடியளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்தியில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து வடக்கில் சுமுகமான நிலமைகள் ஏற்பட்டுவிட்டதாக கருதிக்கொண்டு நாடுதிரும்பும் புலம்பெயர்ந்த உறவுகளின் மீது மேற்கொள்ளப்படும் இராணுவக் கெடுபிடிகளை நீக்குவதற்குரிய நடவடிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினத்தவர்களான தமிழினத்தின் ஆணையை பெற்ற மைத்திரிபால சிறிசேன மத்தியில் ஆட்சி அதிகாரத்தினையும் பெற்றுக்கொண்டார். 

அது மட்டுமன்றி நல்லாட்சி நோக்கிய பயணத்தின் ஆரம்பமாக நூறுநாள் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளார். 

இவ்வாறிருக்கையில் இந்த நாட்டில் மூன்று தசாப்தத்திற்கு மேலாக காணப்பட்ட அசாதாரண நிலைமைகளால் தமது நிலபுலங்களை கைவிட்டு உறவுகளை பிரிந்து இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தமிழர்கள் தஞ்சமடைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்களாகின்ற போதும் கடந்த காலத்தில் மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருந்த மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளாக சித்தரித்துடன் அவர்கள் நாட்டுக்குள் வருகை தருவதற்கும் பல்வேறு தடைகளை விதித்திருந்தது. 

அது மட்டுமன்றி நாட்டுக்குள் வரும் புலம்பெயர்ந்தவர்களை விசாரணை, புலனாய்வளர்கள் பின்தொடரல் என பலஅச்சுறுத்தல்கள் இராணுவத்தினால் பகிரங்கமாக அச்சுறுத்தப்பட்டனர்.

அத்துடன் வடக்கு கிழக்கில் வாழும் புலம்பெயர்ந்தவர்களின் உறவினர்கள் கூட விசாரணை என்ற பெயரில் கடுமையாக நெருக்கடிக்குட்படுத்தப்பட்டனர். 

குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் தமது உறவினர்களின் இறுதிச்சடங்குளில் கூட பங்கேற்க முடியாத நிலைமையொன்று காணப்பட்டிருந்தது. 

இவ்வாறான இன்னல்களுக்குள் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், தமது ஆணையுடன் மத்தியில் மலர்ந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அறிவிப்பால் மகிச்சிடைந்திந்தது. 

குறிப்பாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் நாடுதிரும்ப வேண்டும் எனவும் புதிய முதலீடுகளை செய்வதற்கு முன்வர வேண்டும் எனவும் அரசாங்கம் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தது. அத்துடன் இந்திய அகதி முகாம்களில் உள்ள மக்கள் மீண்டும் குடியேற்றப்படுவார்கள் எனவும் கூறியிருந்தது. 

அரசாங்கத்தின் இவ்வாறிவிப்பை அடுத்து தமிழர் தாயகங்களான வடகிழக்கிலிருந்து அச்சுறுத்தல் காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் தற்போது நாட்டில் சுமுகாமான ஒரு அரசியல் களநிலைமைகள் ஏற்பட்டுள்ளன எனக் கருதி மீண்டும் சொந்த இடங்கள், நண்பர்கள், உறவினர்களைப் பார்வையிடுவதற்காக வருகை தர ஆரம்பித்திருக்கின்றார்கள். 

அதுமட்டுமன்றி உறவுகளின் திருமணங்கள், இறுதிச்சடங்குகள் போன்றவற்றில் பங்கேற்பதற்காவும் நாட்டுக்குள் வருகை தருகின்றனர். 

அவ்வாறிருக்கையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி அமையப்பெற்ற பின்னரும் மீண்டும் புலம்பெயர்ந்தவர்கள் மீதான பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளமை துரதிஸ்டமாகும். 

வடக்கு கிழக்கைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும் பல மணி நேர விசாரணைக்கு பின்னர் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

விசாரணையின் பின் விடுவிக்கப்படுபவர்கள் செல்லும் இடமெல்லாம் இராணுவ புலனாய்வாளர்கள் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

இதனால் தனி நபர்களானவும், தமது குடும்பத்தினரோடும் பலத்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது. 

குறிப்பாக குடும்பமாக வந்தவர்கள், மனைவி குழந்தைகள், மற்றும் தங்கியிருக்கும் உற்றார் உறவினர்களைள் ஆகியோரை இரவு பகலாக இராணுவப் புலனாய்வுத்துறையினர் விசாரணை என்ற பெயரில் தொலைபேசி வாயிலாக குறிப்பிட்ட பிரதேசங்களிலுள்ள இராணுவ முகாம்களுக்கும் தனிப்பட்ட பிரதேசங்களுக்கும் அழைக்கின்றனர். இ

தனால் அவர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். அத்துடன் அவர்களது உறவுகளும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். 

சுற்றுலா பயணிகளாக இல்லாது சாதரணமாக மரணச்சடங்கு ஒன்றில் கூட நிம்மதியாக பங்கேற்க முடியாத நிலைமை காணப்படுகின்றமை மிகவும் வேதனைக்குரியதாகும். 

இந்நிலைமையை கவனத்தில் கொண்டு இலங்கைக்கு வரும் புலம்பெயர்ந்த உறவுகள் முன்னாள் போராளிகள், அவர்களது ஆதரவாளர்கள் சுமூகமான நிலைமை ஏற்படாதவரை நாடு திரும்புவதைத் தவிர்த்து கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கின்றேன். 

தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர் அவருக்கு வாக்களித்த தமிழ் மக்கள் தங்களுக்கு குறைந்தபட்ச சுதந்திரமும் பாதுகாப்பும் அச்சமற்ற நிலைமையும் ஏற்படும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனர். 

இருந்தபோதும் இவ்வாறான செயற்பாடுகள் அந்த நம்பிகையை பாரிய கேள்விக்குறிக்குள் உள்ளாக்கியுள்ளது. 

ஜனாபதிபதி சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தாய்நாட்டிற்கு வரும் தமிழ் மக்களின்மீது கட்டவிழ்த்து விடும் இராணுவக் கெடுபிடிகளை நீக்கி, நடமாடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதுடன் அவர்கள் முதலீடுகளைச் செய்வதற்கும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனை விடுத்து தமிழ் மக்களின் மனங்களை நீங்கள் வெல்ல முயற்சிக்காமல் அவர்களைத் தொடர்ந்தும் அச்சுறுத்தி வைக்க நினத்தால் அது உங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் நம்பிக்கை துரோகம் ஆகும். 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலையும் மட்டும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற தமிழர் விரோத செயல்பாடுகளைக் கைவிட்டு, இதயசுத்தியுடன் கூடிய நிரந்தரமான சமாதானத்தை நிலைநாட்டி, அரசியல் தீர்வை காண்பதற்கு வழியமைக்க வேண்டும்.குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதைக் கைவிடவேண்டும். நொந்து போயிருக்கும் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்த வேண்டாம் என புதிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுகின்றேன் என்றார்.

« PREV
NEXT »

No comments