Latest News

February 28, 2015

ராஜபக்சவின் அமைச்சரவையில் 10 வருடங்களாக அங்கம் வகித்த மைத்திரி, ராஜபக்சவின் ஆட்சியில் நடந்த கொலைகளில் இருந்து எப்படி விலக்கி வைக்க முடியும்
by admin - 0

MAhindha-MY3
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவுஸ்திரேலியாவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இயங்கும் அகதிகள் தொடர்பான செயற்பாட்டுக்குழு, கடந்த 23 ஆம் திகதி மெல்பேர்னில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாட பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தியது.
ராஜபக்சவின் அமைச்சரவையில் 10 வருடங்களாக அங்கம் வகித்த மைத்திரிபால சிறிசேனவை, ராஜபக்சவின் ஆட்சியில் நடந்த கொலைகளில் இருந்து எப்படி விலக்கி வைக்க முடியும் என சந்திப்பில் உரையாற்றிய இலங்கையின் இரகசியங்கள் என்ற நூலை எழுதிய ட்ரவோர் கிராண்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினர் தமிழர்களை படுகொலை செய்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார்.
மைத்திரிபால ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவரது 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர எந்த திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.
தமிழ் பிரதேசங்களில் 5 பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் தமிழ் பிரதேசங்களில் இராணுவம் நிலைகொண்டுள்ளதுடன் தொடர்ந்தும் அனைத்து செயற்பாடுகளிலும் இராணுவ பிரசன்னம் காணப்படுகிறது.
விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னும் அமுலில் இருப்பதுடன் ஆயிரக்கணக்கான தமிழ் கைதிகள் இரகசிய முகாம்களில் இருந்து வருகின்றனர்.
சீனாவுடன் ராஜபக்ச கொண்டிருந்த நெருக்கமான உறவை கவனத்தில் கொண்ட அமெரிக்காவும் இந்தியாவும் மைத்திரிபால சிறிசேனவை ராஜபக்சவிடம் இருந்து பிரித்தெடுத்தன.
தேர்தலில் சிறிசேன வென்ற பின்னர் அமெரிக்க அனுசரணை வழங்கிய இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு, இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து நடத்திய விசாரணையின் அறிக்கையை மார்ச் மாதம் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவிருந்தது. எனி்னும் அது 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கிராண்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இந்த கூட்டத்தில் உரையாற்றிய, இலங்கையில் இருந்து சிறு வயதில் புலம்பெயர்ந்த அரண் மயில்வாகனம், தமிழ் பிரதேசங்களில் காணப்படும் கடும் இராணுவ காவல் மற்றும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தொடர்ந்தும் சிறை வைக்கப்பட்டவர்களாக இருப்பதால், அங்கு தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவது தொடர்பான நிகழ்ச்சி நிரலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவியமையானது வரலாற்றில் பதியப்படும். அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களை அடக்க, 2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பொலிஸார், தமிழர்களின் 300 வீடுகளை முற்றுகையிட்டனர்.
அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்புகள் இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றன.
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் பலவந்தமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் பலருக்கு இலங்கையில் இருந்து தப்பி வந்தமைக்கான காரணத்தை விளக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் அரண் மயில்வாகனம் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அண்மையில் இந்தியாவில் உள்ள அகதி முகாம்களுக்கு தான் மேற்கொண்ட விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரவோர் கிராண்ட், அது கொடுமையானது என விபரித்தார்.
அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் ஊரடங்குச் சட்டத்திற்கு உட்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொழில் புரியும் உரிமை இல்லை.
ஆனால் பலர் தமது வாழ்வாதாரத்திற்காக சட்டவிரோதமாக தொழில் புரிகின்றனர். கட்டிடத் தொழில்களில் பலர் இறக்கின்றனர்.
சில பெண்கள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் ட்ரவோர் கிராண்ட் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »