Latest News

February 27, 2015

வெள்ளை வான் சாட்சி சொல்ல தயார்-சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசாந்த ஜயக்கொடி
by admin - 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ மற்றும் அவரது அமைச்சின் கீழ் செயற்பட்ட ஆயுதக் குழுக்களின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவே நான் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா சென்றேன். அப்போது நாட்டில் இருந்த வெள்ளை வேன் கலாசாரம் தொடர்பில் தான் அறிந்திருந்ததால் தனது மகள், மனைவியின் நிலைமையை எண்ணி அந்த முடிவை எடுத்தேன் என முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

வெள்ளை வேன் கடத்தல்களின் பின்னால் இருந்த முக்கிய இராணுவ அதிகாரிகள் தொடர்பில என்னிடம் ஆதாரம் உள்ளது. அக்காலப்பகுதியில் கருணா அம்மான் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் காணப்பட்டது. வெள்ளை வேன் கலாசரம் தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்பட்டால் நான் சாட்சியமளிக்க தயார் எனவும் பிரசாந்த ஜயகொடி மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் நான் உயிர் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் நீதியான விசாரணை ஒன்று நடத்தப்பட்டு தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். தொடர்ந்தும் பொலிஸ் சேவையில் இணைந்து செயற்பட நான் விரும்புகின்றேன் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு வருடமும் ஏழு மாதங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் நாடு திரும்பிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயகொடி நேற்று மாலை கொழும்பு கலதாரி ஹோட்டலில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அதிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். .

அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது,

மகிழ்ச்சியான தருணம்

ஒரு வருடமும் 7 மாதங்களும் கழித்து எனது தாய் நாட்டுக்கு திரும்பி நான் பழகிய ஊடகவியலாளர்களாகிய உங்களை சந்திப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் ஏன் தாய் நாட்டை விட்டு சென்று அவுஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்தேன் என உங்களுக்கு தெரிந்திருக்கும். எனினும் நான் அதனை சொல்கின்றேன்.

28 வருட சேவை

28 வருட பொலிஸ் சேவையைக் கொண்ட நான் 1977 ஆம் ஆண்டு உப பொலிஸ் பரிசோதகராக சேவையில் இணைந்துகொண்டேன். அன்றிலிருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்லும் போது இரத்தினபுரிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக செயற்பட்ட காலப்பகுதிக்குள் எனக்கெதிராக எவ்வித ஊழல், மோசடி உள்ளிட்ட குற்றச் சாட்டுக்களும் இல்லை. ஏனெனில் நான் நேர்மையாக கடமைகளை முன்னெடுத்த ஒரு பொலிஸ் அதிகாரி.

திடீர் மாற்றங்கள்

இந் நிலையில் நான் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிக்கொன்டிருந்த போது திடீர் திடீர் என கொழும்பின் பல்வேறு இடங்களுக்கும் இடமாற்றப்பட்டேன். இவ்வாறானதொரு நிலையில் தான் தற்போதைய பொலிஸ் மா அதிபர் இதில் தலையிட்டு என்னை இரத்தினபுரிக்கு பொறுப்பன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக நியமித்தார்.

ஏன் அகற்றப்பட்டேன்?

நான் பொலிஸ் பேச்சாளர் பதவியில் இருந்து அகற்றப்பட்டமைக்கு இன்று வரை சரியான காரணம் எனக்கு தெரியாது. எனினும் சில காரணங்களை நான் உணர்ந்துள்ளேன். அதாவது கடந்த ஆட்சியாளர்களுக்கு சாதகாமாக நான் கருத்து வெளியிடாமல் இருந்ததால் என்னை மாற்றியிருக்கலாம்.

அந்த சம்பவம்

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை நான் கூறுகின்றேன். பிரதிப் பொலிஸ் மா அதிபர் லதீப் மொணராகலைக்கு பொறுப்பாக இருந்த காலத்தில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பில் அப்போதைய அரச தரப்புடன் தொடர்புபட்ட ஒரு குழு அங்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கியிருந்தனர்.

எனது அறிக்ககை

இதன் போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் லதீப்புக்கு எதிராக நடவ்டிக்கை எடுத்த போது பலர் கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றை நடத்தினர். இதன் போது பொலிஸார் செயற்பட்ட விதம் மிகச் சரியாக இருந்த நிலையில் நான் மறு நாளே பொலிஸாரின் கடமைக்குள் அரசியல் வாதிகள் தலையீடு செய்வதாகவும் அது ஆரோக்கியமானது அல்ல எனவும் பொலிஸார் செயற்பட்ட விதம் சரியெனவும் ஒரு ஊடக அறிக்கையை வெளிட்யிட்டேன். அது அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகின. இதனையடுத்து நான் அரசுக்கு எதிராக கருத்துக் கூறுவதாக அரசியல் வாதிகள் முறையிட்டுள்ளனர்.

எனது பணி

இதனைவிட புதிதாக நியமனம் பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு கந்தானை பொலிஸ் கல்லூரியில் ஒரு நாள் பொதுமக்கள் உறவு குறித்து விளக்கமளிக்க சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரான நான் பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்டேன். அதில் பொலிஸாரின் தவறான விடயங்களை ஊடகங்கள் சுட்டிக்காட்டும் போது அதனை எப்படி அனுகூலகமாக பார்ப்பது, சிறந்த பொலிஸ் சேவையை எப்படி உருவாக்குவது என்பது குறித்து விளக்கமளித்தேன்.

கோத்தாவின் தொலைபேசி அழைப்பு

அதனை முடித்துக்கொண்டு கொழும்புக்கு வர முன்னரேயே எனக்கு அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நான் அரசுக்கு எதிராக கருத்து வெளியிடுவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களை தூண்டுவதாகவும் எச்சரிக்கப்ப்ட்டேன். இது தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன முன்னிலையில் எனக்கு எதிராக விசாரணை இடம்பெற்றது. எனது விளக்க உரையின் ஒலி வடிவம் என்னிடம் இருந்ததால் நான் அப்படி அரசுக்கு எதிராக செயற்படவில்லை என்பதை என்னால் நிரூபிக்க முடிந்தது.

இரத்தினபுரிக்கு மாற்றம்

இந் நிலையிலேயே நான் இரத்தினபுரி பிரதேசத்துக்கு பொறுப்பாக இடமாற்றம் பெற்றேன். இந்த காலப்பகுதிக்குள் சட்டத்தை அமுல் செய்வதில் எனக்கு பாரிய தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன. இரத்தினபுரியில் இயங்கிய பொதுமக்களுக்கு இடைஞ்சலான சட்ட விரோத கேளிக்கை விடுதிகளை நான் அகற்ற நடவ்டிக்கை எடுத்த போது அப்பிரதேச அரசியல் வாதிகள் உள்ளிட்ட பலரின் அழுத்தங்களுக்கு உள்ளானேன்.

பல அழுத்தங்கள்

எம்பிலிபிட்டி பிரதேச சபையின் தலைவர் சண்டி மல்லி எனப்பட்ட எம்.கே.அமிலவை பொலிஸாரை தாக்கிய குற்றச் சாட்டில் கைது செய்ய முயன்ற போதும் தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன. அத்துடன் இரத்தின புரி பிரதேசத்தில் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட பல வர்த்தகர்கள் அரசியல் வாதிகள் ஊடாக அழுத்தங்களைப் பிரயோகித்தனர். பிரதேச அரசியல் வாதிகள், மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என இதில் அனைவரும் உள்ளடங்குவர்.

கடுமையாக திட்டினார்

இந் நிலையில் தன் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ என்னை பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்து ஒரு நாள் கடுமையாக திட்டித் தீர்த்து அச்சுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு தொலைபேசி அழைப்புக்களின் ஊடாக எனக்கும் குடும்பத்தினருக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

“சவப் பெட்டியை  தயாராக வைத்துக்கொள்”

பல்வேறு தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக வந்த அழைப்புக்கள் ஊடாக உன்னையும் உனது குடும்பத்தினரையும் கொலை செய்வோம், சவப் பெட்டியை தயாராக வைத்துக்கொள் என்ற பல்வேறு அச்சுருத்தல்கள் எனக்கு கிடைத்தன. அது தொடர்பில் நான் எனது மேலதிகாரிகளுக்கு அறிவித்த போதும் எவ்வித பலனும் இல்லை. அந்த தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி விசாரித்து பார்த்ததில் அந்த இலக்கங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டவை என்பதை நான் அறிந்துகொண்டேன்.

ஆதரவு தந்த ஆஸி.

இந் நிலையில் காட்டாட்சியொன்று இடம்பெற்றுக்கொன்டிருந்த, ஐக்கிய நாடுகள் சபையினால் உறுதிப்படுத்தப்பட்ட மனித நேய விடயங்களுக்குள் உள்ள வாழும் உரிமை கூட இல்லாத நிலையில் நான் அவுஸதிரேலியாவுக்கு தப்பிச் சென்றேன். சட்ட ரீதியாகவே நான் அவுஸ்திரேலியா சென்று அகதி அந்தஸ்து பெற்றேன். அங்கும் என்னை தேடிவந்ததாக தகவல் வரவே பல இடங்களில் சென்று வாழ்ந்தேன். எனினும் அவுஸ்திரேலிய அரசு எனக்கு பூரண ஆதரவு தந்தது.

மகள், மனைவியை நினைத்தே சென்றேன்

நான் மரணத்துக்கு பயமில்லை. எனினும் எனது மகள், மனைவி விடயத்தை நினைத்தே இவ்வாறு நான் தப்பிச் செல்ல வேண்டி ஏற்பட்டது. அக்காலத்தில் செயற்பட்ட வெள்ளை வேன் கலாசாரம் தொடர்பில் நன்கு அறிந்திருந்த நிலையில் நான் இவ்வாறு சென்றேன். வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் செயற்பட்ட அல்லது பின்னணியில் இருந்த இராணுவத்தின் அதிகாரிகள் பலர் தொடர்பில் எனக்கு தகவல் தெரியும். இது தொடர்பில் உரிய விசாரணை ஒன்று நடத்தப்பட்டால் நான் சாட்சியம் அளிக்கவும் ஆதாரங்களைக் கையளிக்கவும் தயாராக உள்ளேன்.

ஆயுத குழுக்கள்

அப்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஆயுதக் குழுக்கள் செயற்பட்டன. இவர்களாலேயே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டன. புலிகள் இயக்கத்தில் மிகப் பயங்கரமாக செயற்பட்டு 600 பொலிஸாரை சுட்டுக்கொன்ற கருணாவின் ஆயுதக் குழு யுத்ததின் பின்னரும் நடமாடியது. தண்டிக்கபடவேண்டியவர்கள் ஆயுதக் குழுவாக நடமாடிய நிலையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் பலர் அவ்வாறு செயற்படவில்லை. . அதன் பலனாக கடந்த ஆட்சியில் பொலிஸ் திணைக்களம் பல்வேறு அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தது. சுதந்திரமாக செயற்பட முடியாமல் போனது. அதன் வெளிப்பாடே கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மைத்திரிபால சிரிசேனவின் ஆட்சியை ஏற்படுத்தினர்.

நியமனம் தாருங்கள்

இந் நிலையில் ஒரு நல்லாட்சிக்கான ஆரம்பம் அமைக்கப்ப்ட்டுள்ள நிலையில் நான் நாட்டுக்கு திரும்பியுள்ளேன். நான் தொடர்ந்தும் பொலிஸ் சேவையில் ஈடுபட்டு நாட்டு மக்களுக்கு சேவையாற்ற ஆவலாயுள்ளேன். எனக்கு மீண்டும் நியமனம் வழங்கக் கோரி நான் பொது நிர்வாக சேவைகள் திணைக்களத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன். இந் நிலையில் நாட்டில் மீண்டும் பொதுமக்களுக்கு சேவை செய்யலாம் என நினைக்கின்றேன்.

« PREV
NEXT »

No comments