Latest News

February 27, 2015

மாற்றங்கள் ஏற்பட்டாலும் நட்புறவு மாறாது-சீனா
by Unknown - 0

இலங்கையில் புதிய அரசாங்கம் அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தான் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரி.

கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இலங்கையில் பெருமளவு முதலீடுகளை செய்துள்ள சீனா, தொடர்ந்தும் தனது முதலீடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது.

இந்த பின்னணியில், பெய்ஜிங் சென்றுள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, சீனப்பிரதமர் லீ கேசீயாங்-ஐயும் வெளியுறவு அமைச்சர் வாங் யீ-ஐயும் யும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான கொழும்பு துறைமுக நகர செயற்திட்டம் உள்ளிட்ட சீனாவின் சில முதலீட்டுத் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்ய இருப்பதாக இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இலங்கையில் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா விரும்பாதிருக்கின்ற பின்புலத்தில் இலங்கையின் புதிய அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக, கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்திற்கான பெரும் நிலப்பகுதி சீன நிறுவனத்திற்கு முழு உரித்துடன் சொந்தமாக்கப்படுகின்றமை இந்தியாவுக்கு கவலையளிக்கும் என்று அவதானிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இன்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ- உடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மங்கள சமரவீர, சீனாவின் செயற்திட்டங்கள் தொடர்பில் முடிவெடுக்க முன்னதாக சீன அரசாங்கத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறியுள்ளார்.

'குறிப்பாக, டெண்டர் நடைமுறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் போன்ற விடயங்களை ஆராய தீர்மானித்துள்ளோம். பெப்ரவரி 8-ம் திகதி அரசாங்கம் அமைச்சரவை துணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது. அந்தக் குழு ஒவ்வொரு வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்து, கூடிய விரைவில் தனித்தனி அறிக்கைகளை சமர்ப்பிக்கும்' என்றார் மங்கள சமரவீர.

'சீனாவுடன் தொடர்புடைய விடயங்கள் சீனாவுடன் பரிமாறப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்பட முன்னர் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்' என்று கூறினார் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர.

புதிய அரசாங்கத்தின் கீழ் முதலீடுகளுக்கு இன்னும் பாதுகாப்பான இடமாக இலங்கை இருக்கும் என்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

இதனிடையே, சர்வதேச ரீதியிலும் பிராந்தியத்திலும் இலங்கையும் சீனாவும் ஒன்றுக்கு ஒன்று உதவிகரமாக இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்தார்.

'சர்வதேசத்திலும் பிராந்தியத்திலும் என்ன வகையான மாற்றங்கள் ஏற்பட்டாலும், எங்கள் இரண்டு நாடுகளிலும் என்ன வகையான மாற்றங்கள் ஏற்பட்டாலும் இரண்டு நாடுகளும் எமது பாரம்பரிய நட்புறவை பேண வேண்டும் என்று இருதரப்பும் நம்புகின்றன' என்றார் வாங் யீ.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே, மங்கள சமரவீர அங்கு சென்றுள்ளார். உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின்னர், இலங்கையின் முக்கிய பொருளதார பங்காளியாக சீனா மாறியிருந்தது.

தென்னிலங்கையில் துறைமுகம் ஒன்றும் விமான நிலையம் ஒன்றும் சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »