Latest News

January 21, 2015

பாலகுமார், புதுவை ரத்தினதுரை, யோகி திலகர் போன்ற தலைவர்களுக்கு என்ன நேர்ந்தது TGTE
by admin - 0

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவார் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.


மாற்றமொன்றை உருவாக்கும் நோக்கில் தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்த போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களின் நிலைமைகளை மாற்றி அமைப்பார் என தமிழ் மக்கள் கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சிப் பொறிமுறைமை கட்டமைப்பு நீடிக்கும் வரையில் தமிழர் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுகளை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நடைபெற்று முடிந்த தேர்தல் பதவி வகித்தவர்களின் முகம்களில் மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் மீது இனச்சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்ட இரத்தக் கறைகள் மைத்திரிபால கைகளிலும் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பதில் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவே கடமையாற்றியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே மைத்திரிபாலவிற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அச்சமின்றி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுவதற்கு புலம்பெயர் தமிழர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் அதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்கள் பற்றிய தகவல்ளை புதிய அரசாங்கம் வெளியிட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலிகளின் அரசியல் தலைவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


பாலகுமார், புதுவை ரத்தினதுரை, யோகி மற்றும் திலகர் போன்ற புலிகளின் தலைவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய மர்மம் தொடர்ந்தும் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.


முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

« PREV
NEXT »

No comments