Latest News

January 24, 2015

அதிகாரவாசிகளால் மறுக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வு திரும்புமா?-இதயச்சந்திரன்
by admin - 0

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறைகளிலும், இரகசிய முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளஅனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும், கட்சித்தலைவர்கள் மற்றும் சிவில் தலைவர்கள் உள்ளடங்கிய தேசிய நிறைவேற்று சபைக்கு சமர்ப்பித்து, இந்த நெடுங்காலப் பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அதற்கிணங்க, இந்த விபரங்களை திரட்டி தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களின் கவனத்துக்கு சமர்ப்பிக்குமாறு சபையின் செயலாளர் திலக் ரணவிராஜாவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என்று நம்பப்படுகிறது.

போர்க்குற்ற- இனப்படுகொலை குறித்தான சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன்பாக, முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள்- பொதுமக்கள் பற்றியதான தரவுகள் இப்போது அவசியமாகிறது.
புனர் வாழ்வு அளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், சரணடைந்தவர்களின் எண்ணிக்கையும் சமனா? என்கிற விவகாரம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பல பிரதேசங்களில் மேற்கொண்ட விசாரணைகளில் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. 
கணவனை, பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்த பெண்கள் பலர், மகிந்த உருவாக்கிய எல்.எல்.ஆர்.சி (LLRC )யிடம், தமது உறவுகள் எங்கே? என்று கேட்டுள்ளார்கள்
தாங்களே சாட்சியென அப்பெண்கள் சொன்ன போது, விபரங்களைப் பதிவு செய்து சனாதிபதியிடம் ஒப்படைப்பது மட்டுமே தங்களுக்கு இடப்பட்ட அரசகட்டளை என்று ஆணைக்குழுவினர் நழுவிச்சென்ற சந்தர்ப்பங்களும் உண்டு.

உதாரணத்திற்கு சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
மக்களால் பெரிதும் அறியப்பட்டவர்களான புதுவை இரத்தினதுரை, க.வே.பாலகுமாரன் மற்றும் விடுதலைப்புலிகளின் திருக்கோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் (சசிதரன்) போன்றவர்களின் மனைவியர், தமது கணவன்மார் எங்கே என்று இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் போன்று பலர், தமது உறவுகளை எங்கே தேடுவது என்பதறியாமல் சர்வதேச மன்னிப்புச் சபையிடமும், மனித உரிமைச் சங்கங்களிடமும் முறையிடுகின்றார்கள்.

எங்கே முறையிட்டாலும், 'தேடல்' என்பது இங்கேதான் நிகழவேண்டும். 
அதற்கு முன்னைய அரசும், குறிப்பாக கோத்தபாய இராஜபக்சவும் இணங்கவில்லை. 'உயிரோடு தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்ப்பட்டியலையாவது தாருங்கள்' என்று கூட்டமைப்பின் தலைவர்களும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரும் பலதடவைகள் அரசிடம் கோரிக்கை விடுத்தும், அதைவிட சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டும் ,மகிந்த அரசு அசையவில்லை.

மனிதாபிமானப்போர் (?) தொடுத்து தமிழ் மக்களைப் படுகொலை செய்த முன்னைய அரசு, சிங்கள மக்கள் தம்மோடு இருக்கின்றார்கள் என்கிற வாக்குவங்கித் திமிரிலும், ஆசிய பொருண்மிய வல்லரசின் கடாட்சம் எப்போதும் இருக்குமென்கிற நம்பிக்கையிலும், பக்கத்து வீட்டுச் சுவாமிகளின் ஆசீர்வாத அரவணைப்பிலும் மூழ்கியிருந்தது.

ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான, சிறுபான்மைத்தேசிய இன மக்கள் மகிந்தாவின் ஆட்சியை நிராகரித்து விட்டார்கள். அத்தோடு போர் வெற்றியை வைத்து, அடித்தட்டு மக்களை தொடர்ந்தும் ஒடுக்க முடியாது என்பதனை ஓரளவிற்கு சிங்கள மக்களும் உணர்த்தியுள்ளார்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இப்போது, காணாமல் போகடிக்கப்பட்ட மக்களின் சார்பாக தொடர் போராட்டங்களை ஓய்வின்றி நடாத்திவந்த மனோ கணேசன் அவர்களே, உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய இப்பிரச்சினையை தேசிய நிறைவேற்று சபை முன் கொண்டு சென்றுள்ளார் என்பது வரவேற்கத்தக்கது .

சரணடைந்த போராளிகளில் ஒரு பிரிவினர், 10-15 பேர் கொண்ட சிறுசிறு குழுக்களாக பெரிய படைத் தளங்களிலும், சிறிய நகர்ப்புற முகாம்களிலும் தடுத்து வைக்கபட்டிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. 
சரணடைவின் சாட்சிகள் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், அது குறித்த விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இவைதவிர 90 ஆயிரம் விதவைகள் வட - கிழக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த எண்ணிக்கை குறித்து, மகிந்த அமைச்சர்கள் குறைந்த புள்ளிவிபரங்களை முன்வைத்தார்கள். அது பற்றியதான சரியான தகவல்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 

இதில் கொடுமையான விடயம் என்னவென்றால், கணவன் உயிருடன் இருக்கின்றாரா? அல்லது கொல்லப்பட்டுவிட்டாரா? என்பதுகூடத் தெரியாமல் விதவைகள் போல் வாழும் பெருங்கூட்டம், இன்னமும் இந்தச் சமூகத்தில் இருக்கிறது. 

அதுமட்டுமல்லாது, புலனாய்வுப் பிரிவினராலும் காவல் துறையினராலும் தினமும் கண்காணிப்பிற்குஉள்ளாக்கப்படும் போராளிகள், சமூகத்திலிருந்து அன்னியமாகி வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 'புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள்' என்று சொல்லப்பட்டவர்களும் சபிக்கப்பட்ட பலியாடுகள் போல் இயல்பு வாழ்வு மறுக்கப்பட்டு மூன்றாம்தரப் பிரசைகள் போல் வாழ்கின்றனர். 

கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் சமூகத்தின் பொதுவான இயங்குநிலை, படையதிகாரத்தினால் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் அடிப்படையான தினசரி செயற்பாடுகளைக்கூட , படையதிகாரி ஜி.ஏ.சந்திரசிறி கட்டுப்படுத்தியநிஜவரலாறு நேற்று வரை நடந்தது. அபிவிருத்திக்கூட்டங்களில், மக்கள் பிரதிநிதிகள் இல்லை. இது தொடராமல் இருக்க வேண்டுமாயின், மாகாணசபை இயக்கத்தில் ஆளுநரின் அதிகாரம் மேலோங்கக்கூடாது. அவர் மத்திய அரசிற்கு ஒரு செய்திகாவியாக இருப்பதே சிறப்பு.
தமிழ்நாட்டில் இருப்பது போன்று, குடியரசு தினத்தன்று ஆளுநரின் உரை இருந்தாலே போதும். 

இதனைவிட தமிழ்த் தேசிய இனம் ஒரு 'தேசம்' (Nation) என்கிற அங்கீகாரம் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டு, இணைந்த வட - கிழக்கு பிரதேசத்திற்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். 
ஆனாலும் 13 வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்வு முன்மொழியப்படுமென தனது வழமையான இந்திய மந்திரங்களை பிரதமர் ஓதினாலும், அதனைக்கூட ஏற்கமறுக்கும் பெருந்தேசிய இனவாத சக்திகள், 'நாட்டைப்பிரிக்க சூழ்ச்சி செய்கிறார் இரணில்' என்று ஊளையிடத் தொடங்கிவிடும்.

அதிகாரவாசிகள் ஒன்றைச் சொல்வதும், கடும்போக்குவாதிகள் அதனை எதிர்ப்பதுமான ஒரு தரப்பு விளையாட்டால் தமிழினம் அழிக்கப்படுவதே வரலாறாகிவிட்டது.

இப்போது யாழ்.குடாவில் என்ன நடக்கிறது?. 
பெரும் வல்லரசுகள் தமது அணுக்கழிவுகளை கடலில் கொட்டி இயற்கை அனர்த்தங்கள் விளைவதற்கு துணைபோவது போன்று, மின் நிலைய எண்ணெய்க் கழிவுகள் யாழ்.கிணறுகளை பாழுங்கிணறுகளாகமாற்றும் நிலைகுறித்து விடுக்கப்படும் எச்சரிக்கை கவனிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் நகர்வா இது? என்கிற கேள்வியும் எழுகின்றது.

'சுன்னாகம் அனல் மின் நிலையத்தின் கழிவு நீர் பிரச்சினையை அனைவரும் அறிந்திருப்பீர்கள் ,அதன் தீவிரத் தன்மை தற்போது அதிகமாகி வருகின்றது ,நிலத்தடியில் கழிவு நீரின் பரவுகை அதிகரித்துள்ளது.இன்னும் சில நாட்களில் இதன் ஆபத்து பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது ' என்கிற எச்சரிக்கை விடப்படுகிறது. 

இது குறித்த விழிப்புணர்வுப் போராட்டங்களில் அம்மண்ணில் வாழும் எழுத்தாளர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்கிற அழைப்பு, சமூக வலைத்தளங்களில் பரிமாறப்படுகிறது .புலம் பெயர் மக்களால், சர்வதேச மக்களின் கவனத்தை ஈர்க்கும்வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அறிகின்றோம்.

இவைதவிர, நிலத்திற்கும் மக்களுக்கும் இடையிலான பிரதான முரண்பாடு குறித்து பேச வேண்டும்.
திட்டமிட்ட குடியேற்றங்கள் ஊடாக அப்பிரதேசங்களில் வாழும் மக்களின் நிலஉரிமை மறுக்கப்பட்டது கிழக்கு மாகாண அரசியல் வரலாற்றின் இருண்ட பக்கம். ஆட்சிமாற்றத்திற்கு வாக்களித்த சம்பூர் மக்கள், இன்னமும் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்வது குறித்து, இந்தியா சென்று திரும்பிய மங்கள சமரவீராவிடம் கேட்க வேண்டும்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களிலும், இடைத்தங்கல் முகாம்களிலும், தமிழ்நாட்டிலும்ஏதிலிகளாக வாழும் தமிழ் மக்களின் குடியிருப்பு நிலங்கள் அடாத்தாக அபகரிப்பட்டது அண்மைகால வரலாறு.  

இதுவரை நடைமுறையிலுள்ள, மக்களின் உரித்துக் காணிகளை தேசியபாதுகாப்பு என்கிற போர்வையில் எழுந்தமானமாகக் கைப்பற்றும் அதிகாரத்தைக் கைவிடுமா இப்புதிய அரசாங்கம்?. 
17 வது திருத்தச் சட்டத்தைவிட, தமிழ்பேசும் மக்களின் நிலம் சார்ந்த அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டியது அவசியம். இடம் பெயர்ந்து சென்றவர்களை, 'அவர்களின் சொந்த இடத்தில் குடியமர்த்துவோம்' என்பதற்கு இப்புதிய அரசு உத்தரவாதம் அளித்தால், தமிழ்நாட்டில் அகதி அந்தஸ்து இல்லாமல் ஏதிலிகளாக வாழும் ஈழமக்களை, அவர்கள் விரும்பினால் அழைத்து வரலாம்.

ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்தின் நீண்டகால அவல வாழ்வினை, குறைந்தபட்சம் ஏனைய மக்கள் அனுபவிக்கும் இயல்பு வாழ்வு போல மாற்றுவதற்கு, 11 பேர் கொண்ட தேசிய நிறைவேற்று சபை ஈடுபடுமா? என்று கேட்கத் தோன்றுகிறது. 
இதில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளான இரா.சம்பந்தன்,மனோ கணேசன்,மற்றும் ரவூப் ஹக்கீம் போன்றோரின் சமரசமற்ற பங்களிப்பு அவசியமாகிறது.

குறிப்பாக, இலங்கை வரலாற்றில் சொந்த வீடற்று நிலமற்று, 150 வருடங்களிற்கு மேலாக அகதிகள் போல் வாழும் மலையக தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை குறித்து தமிழ் தலைமைகள் அக்கறை செலுத்த வேண்டும். தேர்தல் காலத்து வாக்குறுதிகள், வழமை போன்று மலைமுகட்டின் மீது வீசும் காற்றோடு கரைந்து விடக்கூடாது.

அதேவேளை இழந்த காணிகளை மீட்கும் மக்கள் போராட்டங்களும் யாழ் மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பேச்சும், போராட்டமும் என்கிற சமாந்தரவகைப்பட்ட உத்தியினைக் கையாள்வதே சரியானது போல் தெரிகிறது. 

ஐ.நா.தீர்மானத்திற்கு 'இடைக்கால ஓய்வு' வழங்கும் திட்டம் குறித்து பரிசீலிக்க வேண்டுமென அமெரிக்க இராசதந்திரிகள் இப்போதே பேசத் தொடங்கி விட்டார்கள்.
ஆகவே ஆட்சிமாற்றத்தின் மறுபக்கம் குறித்து விவாதிக்காவிட்டால், வட - கிழக்குப் பிரச்சினையை வடக்குப் பிரச்சினை என்று குறுக்கியது போல, இது நல்லாட்சிப் பிரச்சினை என்று ஒட்டுமொத்தமாக பூசி மெழுகிவிடுவார்கள்.
« PREV
NEXT »

No comments