Latest News

November 18, 2014

எபோலா: டில்லி திரும்பிய இந்தியப் பிரஜை தனிமைப்படுத்தப்பட்டார்
by admin - 0

லைபீரியாவிலிருந்து இந்தியா திரும்பிய இந்தியப் பிரஜை ஒருவருக்கு எபோலா தொற்று இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

லைபீரியாவில் இருந்தபோது இந்த நோய் தொற்றிய இந்த 26 வயது ஆணுக்கு அவர் அங்கிருந்த போதே உடல்நிலை சரியாகிவிட்டது என்று இந்திய சுகாதார அமைச்சகம் கூறியது.

கடந்த வாரம் டில்லிக்கு விமானம் மூலம் வந்த இவர்மீது , உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளின்படி செய்யப்பட்ட பரிசோதனைகளில், எந்த ஒரு வைரஸ் தொற்றும் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவரது விந்தில் எபோலா வைரஸின் சில கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இவரது உடலிலிருந்து வரும் அனைத்து திரவங்கள் மீதும் நடத்தப்படும் சோதனைகள் அனைத்திலும், வைரஸின் கூறுகள் இல்லை என்ற நிலை வரும் வரை அவர் தனித்து வைக்கப்பட்டிருப்பார் என்று அமைச்சகம் கூறியது.

இதன் மூலமே எபோலா தொற்றை மற்றவர்களுக்கு அவர் பரவவிடாமல் தடுக்க முடியும்.

யாரும் பீதியடையத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

சுகாதார நிலைமைகள் குறித்த தரக்கட்டுப்பாடுகள் குறைவாக இருப்பதாகக் கருதப்படும் இந்தியாவில் இந்த நோய் பரவுவதால் ஏற்படும் பாரிய விளைவுகள் குறித்து முன்னர் ஐநா சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டிருந்தனர்.

« PREV
NEXT »

No comments