Latest News

October 17, 2014

யாழ் ரயிலில் இராணுவத்தினர் ஏறினால் குறுக்கே படுப்பேன்-சிவாஜிலிங்கம்
by admin - 0

sivaji 955dயாழ் ரயிலில் இராணுவத்தினர் ஏற்றப்படுவார்களானால் ரயில் பாதையின் குறுக்கே படுப்பேன் என்று வட மாகாண சபையின் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.45 மணியளவில் யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

யாழ் காங்கேசன்துறை வரை ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு அங்கிருந்து இராணுவத்தினர் ரயிலில் ஏற்றப்படுவார்களானால் அதனை தடுத்து நிறுத்தும் வகையில் ரயில் பாதையின் குறுக்கே படுத்து தடை செய்யவும் தயங்கமாட்டேன் .

வட மாகாணத்திற்கான ரயில் சேவையானது கடந்த 24 வருடங்களுக்கு பின்னர் இந்திய அரசின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையானது படையினரின் நலனையும் உள்ளடக்கியதாகவே காணப்படுகின்றது.

குறிப்பாக காங்கேசன்துறையான ரயில் சேவை நீடிக்கப்பட்டால் அங்கிருந்து இராணுவத்தினரையே ஏற்றமுடியும். இதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. காங்கேசன்துறையில் பொதுமக்களும் சென்று ஏறக் கூடிய நிலைமை உருவாக்கப்படவேண்டும். அதனைவிடுத்து காங்கேசன்துறையில் இராணுவத்தினரை நிரப்பிக் கொண்டு புறப்படும் ரயில் வெளியால் வந்து பொதுமக்களை ஏற்றுவதாக இருந்தால் ரயில் பாதையின் குறுக்கே படுத்து அதனை தடை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதனை இலங்கை அரசுக்கும் இந்தியாவுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தற்போது காங்கேசன்துறை துறைமுகமும், பலாலி விமானத்தளமும் இராணுவத்தினருக்கு உரியனவாகவே காணப்படுகின்றன. இவைகள் சிவில் விமானத்தளமாகவும் துறைமுகமாகவும் செயற்பட வேண்டியது அத்தியாவசியமாகும். காங்கேசன்துறை வரையான ரயில் சேவை நீடிப்பைத் தொடர்ந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை நீடிக்கப்படும் என இந்தியத் தூதரகத் தரப்பினர் தெரிவித்துள்ளார்கள்

« PREV
NEXT »

No comments