Latest News

October 20, 2014

கத்திக்கு ஆப்பு பாதுகாப்பு தர முடியாது!- கமிஷனர்
by admin - 0

கத்தி
படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் பேனரில் வெளியிட்டே தீருவது என்பதில் உறுதியாக இருந்தால், தீபாவளி நேரத்தில் அந்தப் படத்துக்கு பாதுகாப்பு தர முடியாது என சென்னை மாநகர காவல் துறை ஆணையர் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு நாட்கள் கழித்து வெளியிடுவதாக இருந்தால் பரிசீலிக்கலாம் என்றும் கூறியுள்ளார்களாம்.

கத்தி படத்தின் தயாரிப்பாளர்கள் லைகா நிறுவனத்தினர், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதால், அவர்கள் தயாரிக்கும் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கடந்த சில மாதங்களாக தமிழ் அமைப்பினர், மாணவர்கள், அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தப் படம் வெளியாக நிச்சயிக்கப்பட்ட தேதி அக்டோபர் 22, தீபாவளி தினம்.

அன்றைய தினம் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், லைகா பெயரை நீக்கிவிட்டு ரிலீஸ் செய்தால் மட்டுமே படத்தை வெளியிடுவோம். இல்லாவிட்டால் பெரும் போராட்டம் நடக்கும். குறிப்பாக படம் ஓடும் அரங்குகள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பும் மாணவர் அமைப்புகளும் எச்சரித்துள்ளன.

இன்னொரு பக்கம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும், லைகாவின் இந்தப் படத்தை வெளியிடவே கூடாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தங்களின் எதிர்ப்பை எழுத்துப் பூர்வமாக திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் திரையரங்குகள் இந்தப் படத்தை வெளியிடத் தயங்கி நிற்கின்றன. டிக்கெட் முன்பதிவு அறிவிக்கப்பட்டாலும், இதுவரை ஒரு டிக்கெட் கூட விற்கப்படவில்லை.

படத்தின் வெளியீடு, அதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து கடந்த இரு தினங்களாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கத்தியின் இன்னொரு தயாரிப்பாளரான அய்ங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தி இதில் பங்கேற்று பேசி வருகிறார்.

படத்திலிருந்து லைகா பெயர், லோகோ இல்லாமல் வெளியிடுவதாக இருந்தால் தீபாவளிக்கு வெளியிடலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. லைகா பெயரில்தான் வெளியிடுவோம் என்றால் தீபாவளி முடிந்து சில தினங்கள் கழித்து வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று போலீஸ் தரப்பில் ஆலோசனை சொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் லைகா நிறுவனம் தனது முடிவில் உறுதியாக உள்ளதாம். இதனால் எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தவிக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

தீபாவளிக்கு வெளியாகும் இன்னொரு படமான பூஜைக்கு நேற்றே முன்பதிவு தொடங்கிவிட்டது.

« PREV
NEXT »

No comments