Latest News

October 28, 2014

தவறான மேடையில் நின்று, நியாயமான உரிமைக்காகப் போராடுதல் சரியா? - இதயச்சந்திரன்
by admin - 0

தமிழ் தேசிய அரசியலில் ஒரு பிரச்சினைக்குரிய களமாக , வடமாகாணசபை மாறிவிடும்போல் தெரிகிறது. 
முல்லைத்தீவைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் ஒருவர், முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அத்தோடு, சிவாஜிலிங்கத்தின் 'இன அழிப்பு' பிரேரணையும் புதிய சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.

ஐ.நா.தீர்மானத்தில் மனித உரிமை மீறல், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு தேசிய இனத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை என்று கூறவில்லை. 
'அது விசாரணையின் பின்பே தெரியவரும்' என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு வியாக்கியானம் செய்தால், பாண் கி மூன் நியமித்த நிபுணர் குழுவானது தமது அறிக்கையில் 40,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்றும், அதே நிபுணர் குழுவில் இருந்த யாஸ்மின் சூக்கா அம்மையார் பிரான்சிஸ் ஹரிசனின் புத்தக வெளியீட்டில் 70,000 மேல் இருக்கலாம் என்று கூறியது, மனித உரிமை மீறலையும் மீறியதொரு திட்டமிட்ட படுகொலை இங்கு நிகழ்ந்துள்ளதை வெளிப்படுத்தவில்லையா?.

இன அழிப்பு நிகழ்ந்ததை ஐ.நா.சபையே தீர்மானிக்கும் என்றால், இறுதிப்போரில் ஐ.நா.சபையின் நடவடிக்கை குறித்து, சால்ர்ஸ் பெற்றியின் உள்ளக அறிக்கை விடுக்கும் காட்டமான செய்தி பற்றிய கூட்டமைப்பின் பார்வை என்ன?.  
இதனை தமிழரசுக் கட்சியின் வெளியுறவுப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும், அதன் தலைவர் மாவை.சேனாதிராஜாவும் மக்களுக்கு விளக்க வேண்டும். 
இதனைக் கேட்பதற்கு, ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் ஊடகங்களுக்கு உரிமை உண்டென எண்ணுகிறேன்.
ஆட்சி மாற்றம் ஏற்படும்வரைக்கும் விசாரணைகள் நீண்டு செல்லுமா? என்கிற பூகோள அரசியல் கேள்வி ஒன்றும் கிடப்பில் இருக்கிறது.

மதமோதல், குழுமோதல் என்று இன அழிப்பிற்கு வெள்ளையடிக்கும் தீர்மானங்களைக் கொண்டுவந்தவர்களுக்கென்று ஒரு பிராந்திய அரசியல் மூலோபாய நிகழ்ச்சி நிரல் இருக்கும்.
ஆகவே அவர்கள் இறுதிப்போரில் நிகழ்ந்தது மனித உரிமை மீறல் என்றால், 'இல்லை இங்கு நடப்பது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சி' என்பதை உலகிற்குத் தெரியப்படுத்துவது எமது கடமை.

சாட்சியங்களை வழங்கும் எமக்கு, இங்கு நடப்பது திட்டமிட்ட இன அழிப்பு என்று உரத்துச் சொல்லும் உரிமை உண்டு. இது எவ்வாறு விசாரணையைப் பாதிக்குமென்று புரியவில்லை. 
ஆனால் வெளிநாட்டவர் வடக்கிற்கு செல்லக்கூடாது எனத்தடுத்தால் அது விசாரணையைப் பாதிக்கும். அதனை சிங்களம் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது.

இணக்க அரசியல் செய்ய வேண்டுமாயின், ' இன அழிப்பு' என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தக் கூடாதென்பதோடு, அது இராசாவின் தந்திரங்களுக்கு பாதகமாக அமையுமென்ற அறிவுரைகளை ,ஆட்சி மாற்றத்தை விரும்பும் வல்லரசாளர்கள் அள்ளி வழங்கி இருப்பார்கள் போல் தெரிகிறது.

வடக்கிலுள்ளவர்கள் 'இன அழிப்பு' என்று அடம் பிடிப்பதால், நாம் விசாரணையை நிறுத்துகிறோம் என்று ஐ.நா.மனித உரிமை பேரவை நழுவிச் செல்லாது.

தருஸ்மான் தலைமையிலான நிபுணர் குழு அறிக்கையில், 'இன அழிப்பு' நிகழ்ந்ததை நிரூபிக்கக் கூடியவகையில் போதுமான சான்றுகள் இல்லையென்றால், அது யாருடைய தவறு?.
மீள் குடியேற்றப்படாத நிலையில் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் வாழ்ந்த மக்களின் தவறா? அல்லது நேரடியான கள விசாரணையை மேற்கொள்ள முடியாத கையறு நிலையில் அல்லது அசமந்தமாக இருந்த ஐ.நா.வின் தவறா?.

இப்போது நியமிக்கப்பட்ட குழுவும் இதே நிலையில்தான் இருக்கிறது.

சர்வதேச வல்லரசுகளோடு பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பால், ஐ.நா.நிபுணர் குழுவினை தமிழர் தாயகப்பகுதிகளுக்கு அழைத்துவர முடியாதா?. 
இவர்கள் மார்ச்சில் சமர்ப்பிக்கப்போகும் இறுதி அறிக்கையும், நேரடிச் சாட்சிகளற்ற பலவீனமான, இன அழிப்பு நிகழ்ந்ததை நிரூபிக்க முடியாத ஒன்றாகவே இருக்கப்போகிறது.

மறுபடியும், போதுமான சாட்சியங்கள் இல்லாததால் 'இன அழிப்பு' என்பதனை நிரூபிக்க முடியவில்லை என்று ஐ.நா.மனித உரிமைப் பேரவை தெரிவிக்க முன், கூட்டமைப்பு கூறிவிடும் போல் தெரிகிறது.

ஐ.நா.வைப் பொறுத்தவரை இலங்கையின் இறைமையையும் காப்பாற்ற வேண்டும், சுயாதீன விசாரணையையும் நடாத்த வேண்டும் என்றால் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதுதான் இங்குள்ள பிரதானமான கேள்வியாகும். ஐ.நா விசாரணைக்கு தடை உத்தரவையும் மகிந்த அரசு பிறப்பித்துள்ளது.
ஐ.நா.சபைக்கு கடிதம் அனுப்பிய 32 வட - கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களையும் நீதித்துறை கேள்வி கேட்கிறது

ஆகவே ஜனவரில் முகூர்த்தம் பார்த்து, மாவை.சேனாதிராஜா அவர்கள் ஆரம்பிக்கும் அறவழிப் போராட்டத்திலாவது 'மனித உரிமை மீறலுக்கு எதிரான போராட்டம்' என்று கூறாமல் இருப்பது நன்று.

2012 நவம்பரில், பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டன் மாநகரில் மாநாடு ஒன்று நிகழ்த்தப்பட்டது .
இந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து வருகை தந்த பல இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான மாவை.சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
அதில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ' இலங்கையில் நடைபெறுவது இன அழிப்பு' என்பதாக அமைந்தது. 
ஆரம்பத்தில் இத்தீர்மானத்தில் முரண்பட்டு நின்ற இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் கூட, பலத்த விவாதங்களின் பின்னர் அதனை ஏற்றுக்கொண்டனர். அதில் குறிப்பாக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகனின் பங்களிப்பு மிகவும் காத்திரமாகவிருந்தது.

இவைதவிர, ஐ.நா.வின் இன அழிப்பு தொடர்பான சாசனத்தின் சரத்து 2 இனை இப்போது துணைக்கழைப்பவர்கள் , அப்போது கொண்டுவரப்பட்ட அத்தீர்மானத்தினை மக்கள் முன்னால் ஏன் நிராகரிக்கவில்லை? என்கிற கேள்வி எழுகிறது.
வாக்கு வேட்டையின் போது மாவீரர் என்றும், அதிகாரம் கிடைத்தவுடன் தீண்டத்தகாத- ஒட்டுறவற்ற மனிதர்கள் என்றும், நேரத்திற்கு ஏற்ப போடும் இரட்டை வேடங்கள் தொடர்கதையாவது போலிருக்கிறது.

அண்மையில், வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களுடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் நிகழ்த்திய பிரத்தியேக சந்திப்பு குறித்த பதிவொன்று சமூக வலைத் தளங்களில் வலம் வந்தது. மனோவைப் பொறுத்தவரை, அடக்குமுறை அரசிற்கு எதிரான ஒடுக்கப்படும் மக்களின் ஒன்றிணைவின் அவசியத்தை உணர்வதால் இச் சந்திப்பினை அவர் மேற்கொண்டிருக்கலாம்.

அந்த உரையாடலில், 'நான் முன்வந்து நல்லிணக்கத்தை காட்டியதால்தான் இப்போது அரசின் உண்மை முகம் தெரியவந்துள்ளது. இதை அன்று தன்னை விமர்சித்த பலர் இன்று புரிந்து கொண்டுள்ளார்கள்' என விக்னேஸ்வரன் கூறியதோடு, 'அங்குள்ள ஆளுநர் சந்திரசிறி, அரசியல் நிர்வாக முடிவுகளை எடுத்து செயற்படுகிறார்' என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்து கூறும்படி மனோவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும், தென்னிலங்கை மக்கள் தமக்கு மாகாணசபை தேவையென்று எப்போதாவது கோரிக்கை விடுத்தார்களா ?என்கிற மில்லியன் டொலர் கேள்வியை வடக்கு முதலமைச்சரிடம் கேட்பது அர்த்தமற்றது. 

'வடமாகாணசபையானது ஆளுநரின் பிடிக்குள் அகப்பட்டுக் கிடக்கிறது ' என்று சிங்கள மக்களுக்குச் சொன்னால், இந்தியாவும் ஜே.ஆரும் கொண்டுவந்த 13 வது திருத்தச் சட்டத்தில் அப்படித்தானே இருக்கிறது என்று பொதுபல சேனாவும், ஜாதிக ஹெல உறுமயவும் கிண்டலடிக்கும். 

அது ஒரு 'Comic OPERA' என்று சட்டத்தரணி சத்தியேந்திரா நக்கலடிப்பார்.
81 ஆம் ஆண்டு மாவட்ட சபையோடு தமிழின இறைமைக் கோட்பாட்டினை துறந்தவர்கள் 13 ஊடாக எதையும் பெற முடியாதென, யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் சுருக்கமாக விளக்குவார். 
'இரட்டை நாக்கு' இராசதந்திரம், எம்.பி.பதவிகளைத் தக்க வைக்கும். ஆனால் மக்களுக்கு, அவர்களின் பிறப்புரிமையைப் பெற்றுத் தராது என்பார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..

குடும்ப சமேதராக மகிந்தரின் முன்னால் நின்று சத்தியப்பிரமாணம் செய்தது நல்லிணக்கத்தைக் காட்டுவதற்காக என்றால், அந்த நல்லிணக்க அரசியலானது ( consensus politics ) சிங்களத்தின் ஒற்றைப்பரிமாண ஓர் இறைமைக்கொள்கையால் நிராகரிக்கப்படும் என்பதனை, வட - கிழக்கில் பூர்வீகமாக வாழும் பாமரனும் புரிந்து கொள்வான். 
அவர்கள் புத்திஜீவிகள் அல்லர், யதார்த்தவாதிகள். 
அவர்களுக்கு சிங்களத்தின் அரசியலமைப்பில் என்ன கிடக்கிறது என்று தெரியாது. ஆனாலும் தாம் யார்? தமக்கு என்ன வேண்டும், தமதுரிமை என்னவென்று தெளிவாகத் தெரியும்.

ஆதலால்தான், தமது அடிப்படை உரிமையை வெளிப்படுத்த, வேறு வழியின்றி வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களிக்கின்றார்கள்.

நல்லிணக்க ஒப்பந்தங்கள் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் காலத்திலே முன்னெடுக்கப்பட்டன. அதனை கிழித்தெறிந்தது பௌத்த சிங்களப் பேரினவாத அரசுகள். ரணில் - பிரபா ஒப்பந்தத்தையும் அவர்களே ஒரு தலைப்பட்சமாக தூக்கி எறிந்தார்கள். 

விக்கினேஸ்வரன் அவர்கள் நல்லிணக்க நேசக்கரத்தை நீட்டினாலும், அதனைத் தட்டிவிடும் அதிகாரத்திமிரினை சிங்களம் மாற்றாது. இந்த வரலாற்று உண்மையினை விக்கினேஸ்வரன் அவர்கள் மறந்தாலும், ஓட்டுப் போடும் மக்கள் மறக்க மாட்டார்கள். 

தவறான மேடையில் நின்று, நியாயமான உரிமைக்காகப் போராடுவது மாபெரும் தவறு என்பதை மாகாணசபை முறைமை மீண்டும் நிரூபிக்கிறது.
« PREV
NEXT »

No comments