Latest News

October 19, 2014

வடமாகாணத்தில் எங்கு திரும்பினாலும் படையினர் மயமாகவே இருக்கின்றது!- முதலமைச்சர் சீ.வி.
by Unknown - 0

வடமாகாணம் முழுவதும் படையினர் தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், எங்கு திரும்பினாலும் படையினர் மயமாகவே இருக்கின்றது. என சுட்டிக் காட்டியிருக்கும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், படையினரின் அபகரிப்பினால் தமிழ் மக்கள் பல அவலங்களை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் குடிநீர் தட்டுப்பாடு, எங்கள் சுற்றாடல் அசுத்தமாக்கப்படுதல் போன்றனவும் கூட படையினரின் இருப்பினால் உண்டாக்கப்படுகின்றன. என அமைச்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்னார் முள்ளிக்குளம் மக்களுக்கான அரை நிரந்த வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இன்றைய தினம் மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதலமைச்சர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வில் மேலும் அவர் உரையாற்றும் போது தெரிவித்ததாவது.
தொடர்ந்து வடகிழக்கு மாகாணங்களில் படையினர் பெருவாரியாக அரசாங்கத்தால் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால் எமது மக்கள் படும் அவலத்தையும் அவதியையும் எடுத்தியம்பும் ஒரு நிகழ்வாக இன்றைய இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
முள்ளிக்குளம் பகுதியில் இருந்து கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த எம்மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று குடியேற முடியாத ஒரு நிலையை படையினர் ஏற்படுத்தியிருக்கின்றனர். இவர்களின் பலகால வாழ்விடங்களை விட்டு வெளியேற படையினர் மறுக்கின்றனர்.
எங்கு சென்றாலும் இப்பொழுது இராணுவ பிரசன்னத்தையும் அவர்கள் முகாம்களையுந்தான் பார்க்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை  ஏற்படுத்தியுள்ளார்கள் அரசாங்கத்தினர்.
நேற்று இரணைமடுக் குளத்தைப் பார்வையிடச் சென்றேன். அங்கும் இராணுவம். சென்ற கிழமை ஈச்சிலவக்கை சென்றேன். அங்கும் இராணுவம். எங்கும் இராணுவம். இவர்கள் எம் மண்ணில் நீடித்து நிற்பதால் பல அவலங்களை நாம் எதிர்நோக்கி வருகின்றோம்.
நீர் பற்றாக்குறை, நீரில் அசுத்தம் கலத்தல் போன்றவை கூட படையினரின் பிரசன்னத்தால் ஏற்பட்டு வரும் விளைவுகளே என்று சென்ற சில நாட்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவிக்கப் பட்டது. 
இங்கு 82 குடும்பங்களுக்கு ஒரு நடுத்தர வீடமைப்புத் திட்டத்தை வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. வீடுகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஆனால் படையினர் இம்மக்களின் சொந்த இடங்களில் தொடர்ந்து குடிகொண்டிருப்பதால் மழை வந்து விட்ட இந்தக் கால கட்டத்தில் என்ன செய்வது என்று நாங்கள் கலந்தாலோசித்து அவர்கள் வெளியே போகும் வரை எம் மக்களின் பாடு என்னவாகும் என்பதைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் தற்காலிக கொட்டில்களிலும் குடிசைகளிலும் அவர்கள் சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்து வருவதையும் பார்த்துத்தான் அவர்களின் நிம்மதியையும் பாதுகாப்பையும் உத்தேசித்து ஒரு தற்காலிக வீட்டுத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளோம்.
இவர்களுக்குத் தற்போது அமைக்கப் படுகின்ற இந்த நடுத்தர வகையான வீடுகளானது சீமெந்தினால் அமைக்கப்பட்ட தளத்தின் மீது இரண்டு வரிக்கற்களுடன் சுவர்கள் அமைத்து அதன் மேல் கிடுகு 
கூரை, தகரம் என 15 அடி தர 12 அடி அளவுப் பிரமாணத்தில் இரண்டு அறைகள் விறாந்தை என்ற அடிப்படையில் அமைக்கப் படுகின்றன. மூன்று வாரங்களுக்குள் இந்தத் திட்டத்தைப் பூர்த்தியடையச் செய்யவிருக்கின்றோம்.

ஒவ்வொரு வீட்டுக்கும் 50,000 ரூபா செலவிடப்படும். 82 குடும்பங்களுக்கும் 82 வீடுகள் கட்டப்படுவன. இவ்வாறு செய்யாது விட்டிருந்தால் இராணுவமும் வெளியேறியிருக்காது எம் மக்களும் மழையில் நனைந்து பரிதவித்திருப்பார்கள்.
இன்று எம்மால் நேரடியாகவும் எம்பொருட்டு மறைமுகமாகவும் பல நன்மைகள் எம்மக்களுக்குக் கிடைத்து வருகின்றன. இன்று நடைபெறுவது எமது நேரடி உதவிகள்.
சென்ற கிழமை எம் நிமித்தம் மறைமுக உதவிகளை எமது மக்கள் பெற்றார்கள். நாம் பதவியில் இருப்பதால் நாங்கள் எதுவும் செய்யவில்லை தாங்களே எல்லாவற்றையும் செய்ய வல்லவர்கள் என்பதை எடுத்துக் காட்ட எமது மக்கள் 20,000 பேர்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்ட்டன.
மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டன. புகையிரதப் பாதை திறந்து வைக்கப்பட்டது. மேலும் பல காரியங்கள் நடந்தேறியுள்ளன. வீரசிங்கம் மண்டபம் குறுகிய கால கட்டத்தினுள் புனருத்தாரணம் 
செய்யப்பட்டுள்ளது. இவை யாவையும் எம் நிமித்தம் செய்யப்பட்ட அரசாங்கக் கைங்கரியங்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

இரண்டு வருடங்களாக எம் மக்களுக்கு வழங்காது இடை நிறுத்தி வைக்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் 20,000 மும் திடீரென்று எம் மக்களுக்குப் போய்ச் சேர்கின்றது என்றால் அதற்குக் காரணம் 3என்ன? மக்களின் ஆபரணங்கள் 5 வருடங்களின் பின்னர் திடீரென்று வெளிக்கொண்டு வந்த தார்ப்பரீயம் என்ன? வடமாகாணத்தைத் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் வசம் வைத்திருக்கின்றது.
ஆனால் வடமாகாண மக்களின் வாக்குகளைப் புறக்கணித்து என்னால் ஜனாதிபதி பதவியை மூன்றாம் முறை எட்ட முடியாது. ஆகவே வடமாகாண மக்களை எப்படியாவது என் பக்கம் இழுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் எமது மாண்புமிகு ஜனாதிபதி தாராள சிந்தையுடைய கொடையாளியாக மாறி உள்ளார்.
ஆனால் எம் மக்களுக்கு நன்றாகத் தெரியும் புகையிரதப் பாதையை நிர்மாணித்துத் தந்தது இந்திய அரசாங்கம் என்று. வன்னியின் வைத்தியசாலையை அமைத்துக் கொடுத்தவர்கள் பசுபிக் பிராந்திய அமெரிக்கக் கடற்படையினர் என்று. இவ்வாறு சுயநலங்கருதியே சும்மா இருந்த ஜனாதிபதி சுறுசுறுப்பாக வடக்கு வந்து சுற்றுலா மேற்கொண்டு விட்டு சென்றுள்ளார் என்பது சுற்று வட்டத்தார் யாவருக்குந் தெரியும்.
நாம் பதவியில் இருப்பது எந்தளவுக்கு அரசாங்கத்தை நிலைகுலைய வைத்துள்ளது என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நாம் வெறுமனே பதவியில் இருந்தாலே போதும் அரசாங்கம் உங்களுக்கு வாரித் தருவார்கள். படையினர் எதற்காக மக்களை வசீகரிக்கச் செயற்திட்டங்கள் வகுத்துச் செயலாற்றுகின்றார்கள்.
அவர்களை வெளியேறுமாறு வடமாகாணசபை கேட்டுள்ளது. தாம் தொடர்ந்து இங்கு இருக்க வேண்டும் என்றால் எம் மக்களின் மனத்தைக் குளிர வைக்க வேண்டும். பலதைக் கொடுத்தும் பயம் காட்டியுந் தேர்தலில் தமது பங்காளர்களை நிறுத்தியும் மக்கள் தங்களுக்கு வாக்களிக்காத படியினால் எப்படியாவது எம் மக்கள் மனதை மாற்ற வேண்டும் என்று மானியங்களை வழங்கி வருகின்றார்கள் படையினர்.
நாங்கள் பதவியில் இருக்கும் வரை அவர்கள் தொடர்ந்து பலதை உங்கள் நன்மைக்காகச் செய்து வருவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு எமது வாக்குகள் வேண்டும். ஏன் அவர்கள் பதவியில் இருந்தால் அவற்றைச் செய்ய மாட்டார்களா என்று கேட்பீர்கள்.
செய்வார்கள் ஆனால் முழுமையாக வடமாகாணத்தைச் சிங்கள நாடாக மாற்றிச் செயல்ப்படுவார்கள்.
நாம் இருப்பதால்த்தான் அவர்கள் சென்ற ஐந்து வருடங்கள் தான்தோன்றித்தனமாய்ச் செய்து வந்தவற்றைச் சற்றுத் தளர்த்தி தவிர்த்து வருகின்றார்கள். நாம் இருப்பதால் இங்கு பலர் செய்த ஊழல்கள் 
அம்பலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.

மக்களின் பணத்தை எவ்வாறு கொள்ளை அடித்தார்கள் என்பது வெளிவந்து கொண்டிருக்கின்றது. நாமிருந்தால் ஊழலின்றிச் செயற்பட வேண்டிய ஒரு கடப்பாடு எல்லோருக்கும் எழுந்துள்ளது.
நாம் விதங்களில் எமக்கு வேண்டியவற்றைப் பெறலாம். ஒன்று வன்முறை. ஆனால் வன்முறை மேலும் வன்முறைக்கே வித்திடும்.
இரண்டு வலியச் சென்று சரணடைந்து எமது வாழ்வை விருத்தி செய்வது. என்றென்றும் இவ்வாறு நலன் பெறுபவர்கள் அடிமைகள் என்றே கணிக்கப்படுவார்கள்.
மூன்றாவது அப்பழுக்கற்ற கொள்கைகளை முன்வைத்து எமது தேவைகளைக் கூறிப் பெற எத்தனிப்பது.
இது காலம் போகும். ஆனால் காலக் கிரமத்தில் நன்மை பயக்கும். நாம் இதைத்தான் செய்து வருகின்றோம். வன்முறையைக் கண்டித்துள்ளோம்.
வருந்தி அழைத்தாலும் எமது வலுவான கொள்கைகளில் இருந்து வழுவாது எமது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.
ஆகவே வடமாகாணம் எந்த விதத்திலும் நன்மை பெறப்போவது நிச்சயமே. எமது வருங்காலம் நல்ல காலமாக அமையப் போவது நிச்சயமே
« PREV
NEXT »