Latest News

September 02, 2014

தமிழ் ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
by admin - 0

சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும் எனக்கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சென்னையில் நடத்தவுள்ளது.


இது தொடர்பில் ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர் நிலைக்குழுக் கூட்டம் தலைமைக் கழகம் தாயகத்தில் நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் இலங்கை இரா ணுவத்தை ஏவி இலட்சக்கணக் கான ஈழத் தமிழர்களை படுகொலை செய்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியாவார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் எண்ணிலடங்காத தமிழர்கள் படுகொலை உள்ளிட்ட, இலங்கை அரசாங்கத்தின் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து, சுதந்திரமான பன்னாட்டு நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 

அதன்படி, ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அறிவித்தபோதிலும், அந்த விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ஆணவத்தோடு இலங்கை அரசாங்கம் அறிவித்தது. 

ஐ.நாவின் மதிப்புக்கே பங்கம் விளைவித்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை, ஐ.நாவின் பொதுச் சபையில் செப்டெம்பர் 25ஆம் திகதி உரையாற்ற அழைப்பு விடுத் திருப்பது, ஐ.நா.வின் நம்பகத் தன்மையையே கேள்விக்குறியாக்கி விட்டது.

எனவே, அதற்குக் கண்டனம் தெரிவித்தும், மகிந்தவுக்கு விடுத்த அழைப்பை திரும்பப் பெறக்கோரியும், ஐ.நா.அறிவித்த விசாரணைக் குழுவினரை இந்தியாவுக்கு வர அனுமதிக்க வேண்டும்.

தொப்புள் கொடி உறவுகளான ஏழரைக்கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில், இலங்கை அரசின் இனக்கொலையால் தமிழகத்துக்கு வந்து தஞ்கமடைந்த ஈழத் தமிழ் அகதிகள் விசாரணைக்குழுவிடம் அச்சமின்றி வாக்குமூலம் வழங்க உத்தரவாதம் தருகிற நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

அதனைச் செயல்படுத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமித்துள்ள இலங்கை இராணுவமும் பொலிஙனு முற்றாக வெளியேற்றப்பட்டு, ஈழத்தமிழர் தாயகத்தில் திணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்ற வேண்டும்.

அத்துடன், முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு ஈழத்தமிழர்களின் பூர்வீக தாயகத்திலும் உல கின் பல்வேறு நாடுகளில் உள்ள புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் ஐ.நாவின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும்.

இவற்றை வலியுறுத்தியே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தலைநகர் சென்னையில் செப்டெம்பர் 9ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் உயர் நிலைக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
« PREV
NEXT »