Latest News

September 13, 2014

ஜெனீவாவிலும் நியூயோர்க்கிலும் பொங்கும் தமிழராய் பொங்கி எழுவோம்- பிரதமர் வி.உருத்திரகுமாரன்
by Unknown - 0

பொங்குதமிழென சங்கே முழங்கு என தமிழர்களுக்கான பரிகார நீதியினைக் கோரி, புலம்பெயர் தமிழர்களால் இருவேறு கண்டங்களில் மக்கள் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

எதிர்வரும் திங்கட்கிழமை(15.09.2014) ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாலும், தொடர்ந்து (24-09-2014) நியூயோக்க் ஐ.நா பொதுச்சபையின் முன்னாலும் இந்த எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறுகின்றது.
ஜெனீவா எழுச்சி நிகழ்வில் சுவிஸ் வாழ் தமிழ் மக்களோடு ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் மக்களும், நியூயோர்க் எழுச்சி நிகழ்வில் அமெரிக்கா வாழ் தமிழ் மக்களோடு கனடாவில் இருந்தும் தமிழ் மக்கள் இணைந்து கொள்கின்றனர்.
காலத்தின் தேவையறிந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எழுச்சி நிகழ்வுகளில், தமிழ் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு எமக்கான உரிமைக்குரலை உரத்து வெளிப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்களையும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறது.
சிறிலங்கா அரசால் தம்மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்ப முடியாதுள்ள தாயக மக்களின் பொங்குதமிழ் முழக்கமாக, எமது குரல்கள் ஐ.நாவினை நோக்கி ஒங்கி ஒலிக்கட்டும்.

ஜெனீவா
ஐ.நா மனித உரிமைச்சபையின் 27வது கூட்டத் தொடர் அமர்வு இடம்பெற்றுவரும் வேளையில், ஜெனீவா மனித உரிமைச் சபை முன்றலில் (15-09-2014) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்ந எழுச்சி நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த அமர்வில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையினால் முன்னெடுக்கப்படும் அனைத்துலக விசாரணை தொடர்பிலான முதலாவது வாய்மொழியறிக்கை சபையில் முன்வைக்கபட இருக்கின்றது.
ஐ.நா மனித உரிமைச்சபையின் விசாரணையினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்து வரும் நிலையில், சிறிலங்கா மீதான அழுத்தங்கள் அதிகரித்துச் செல்லும் சூழல் காணப்படுகின்றது.
அனைத்துலக விசாரணையின் சாட்சியங்களுக்கான பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தவும, அவர்கள் மீதான அச்சுறுத்தல்களின் பின்விளைவுகளை சிறிலங்காவுக்கு எச்சரிக்கை செய்யவும், ஐ.நா மனித உரிமைச்சபையானது ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரை செய்யவேண்டுமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மனித உரிமைச்சபையின் புதிய ஆணையாளர் அவர்களிடம் ஏலவே கோரியுள்ளது.
இக்கோரிக்கையினை வலுப்படுத்தும் வகையில், அனைத்துலக நாடுகளை நோக்கி மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் செயற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

நியூயோர்க்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் முன்னே நடைபெறுகின்ற (24-09-2014)பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வும் காலமுக்கியத்துவம் நிறைந்ததே.
ஈழத்தமிழினத்தின் மீதான இனப்படுகொலையினைத் தலைமை தாங்கி நடாத்திய சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஐபக்ச, இரத்தம் தோய்ந்த கரங்களோடு ஐ.நா பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றார்.
சிறிலங்கா அரசுத் தலைவரின் வருகைக்கு எதிர்ப்புக் காட்டுவதுடன், சிறிலங்கா அரசினது தமிழினத்தின் மீதான இனப்படுகொலையினை அனைத்துலகத்தின் முன் அம்பலப்படுத்தி, தமிழர்களுக்கான பரிகார நீயினை இந்நாளிலும் கோரி பொங்குதமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆட்சிப்பீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களும், சபையில் பங்கெடுக்க இருப்பதனால், இப்பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வென்பது பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
அன்பார்ந்த தமிழ் உறவுகளே !
நாம் அனைவரும் ஜெனீவாவிலும் நியூயோர்க்கிலும் பொங்கும் தமிழராய் பொங்கி எழுந்து, தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தினை வீச்சுடன் முன்னோக்கி நகர்த்துவோம்.
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
விசுவநாதன் ருத்ரகுமாரன் 
பிரதமர், 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
« PREV
NEXT »