Latest News

September 15, 2014

விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் -ஜெயலலிதாவின் கருத்திற்கு தமிழக த.தே.கூட்டமைப்பு கண்டனம்
by Unknown - 0

விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் என்று கூறிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தை மாற்றக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.
2009 இல் ஈழத்தில் நடைபெற்ற மிக மோசமான போரில் இந்த நூற்றாண்டு காணாத அளவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
போரின் இறுதி நாட்களில் விடுதலை புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிக்கப் போவதாக அறிவித்தனர். அவர்கள் அறிவித்தவாறே இன்று வரை சிங்களவர்களுடன் ஆயுதப் போரில் விடுதலைப் புலிகள் ஈடுபடவில்லை.
சிங்கள இனவெறி அரசால் இன்றுவரை தமிழர்கள் சொல்லவொண்ணா கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இருப்பினும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இனப்படுகொலையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் உலகத் தமிழர்களும் போராடி வருகின்றனர்.
2009 க்கு பிறகு விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி எந்த ஒரு விதமான தாக்குதலிலும் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பிறகு இந்நாள் வரை ஈழத்தமிழர்கள் தங்களுக்கான பேரம் பேசும் சக்தியை இழந்து குறைந்த பட்ச அரசியல் உரிமைகள் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
சிங்கள அரசு, தான் செய்த செய்து வருகின்ற குற்றங்களை மறைக்க விடுதலைப் புலிகள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறது. இந்திய அரசும், இந்திய ஊடகங்களும் தேவையில்லாமல் விடுதலைப் புலிகள் தமிழகத்தில் இருந்து இயங்குகின்றனர் என்று பொய்யான செய்தியை கூறுகின்றன.
இதனால் விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று வரை இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே உள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடையை உடைக்க வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழக முதல்வரும் இப்போது தனது பங்கிற்கு அவதூறு செய்தியை பரப்புகிறார்.
ஜெயலலிதா நீதிமன்றத்தில் தனக்கு விடுதலை புலிகள் மூலமாக அச்சுறுத்தல் உள்ளது என்று கூறுவது விடுதலைப் புலிகளின் அறம் சார்ந்த விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது.
விடுதலைப் புலிகளால் உலகத் தமிழர்களுக்கு பாதுகாப்பே தவிர ஒருநாளும் அச்சுறுத்தல் இல்லை என்பதை தமிழர்கள் நன்கு அறிவார்கள். 
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சட்டமன்ற தீர்மானங்களை ஜெயலலிதாவின் அரசு நிறைவேற்றிய பிறகு இப்போது ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளாக விளங்கும் விடுதலைப் புலிகளால் ஆபத்து என்று ஜெயலலிதா கூறுவது முற்றும் முரணாகவே உள்ளது.
ஆதலால் உண்மைக்கு புறம்பான கருத்தை நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழர்களின் சார்பில் தமிழகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது, என குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »